தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு…மதமாற்றம் முயற்சி நடந்ததாக எந்த புகாரும் இல்லை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்..!!

Author: Rajesh
24 January 2022, 10:20 am

தஞ்சை: தஞ்சையில் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் மாணவியை மதம் மாற்றம் செய்ய முயற்சி நடந்ததாக எந்த புகாரும் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் பள்ளி மாணவி மரணம் தமிழகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூரில் பள்ளி ஒன்றின் ஹாஸ்டலில் தங்கி படித்து வந்த பிளஸ் 2 மாணவி பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த மாணவிக்கு ஹாஸ்டல் வார்டன் தொடர்ந்து தொல்லை கொடுத்ததாகவும், கழிவறைகளை சுத்தம் செய்ய சொல்லி கொடுமை படுத்தியதால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பள்ளி ஆசிரியர்கள் சிலர் மாணவியை மத மாற்றம் செய்ய முயன்றதால் அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த மாணவி பலியான விவகாரத்தில் ஹாஸ்டல் வார்டன் சகாயமேரி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து, மாணவியின் தந்தை மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்நிலையில் மாணவியின் உடலை அடக்கம் செய்யும்படியும், இந்த தற்கொலை குறித்து தஞ்சை மேஜிஸ்டிரேட் நீதிமன்றம் முன்பு வாக்குமூலம் அளிக்கப்படியும் மாணவியின் பெற்றோருக்கு உத்தரவிடப்பட்டது.

அன்பில் மகேஷ்

இதையடுத்து மாணவியின் தந்தை நேற்று தஞ்சாவூர் மேஜிஸ்டிரேட் நீதிமன்றம் முன்பு வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து மாணவியின் உடல் அவரின் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் தஞ்சை மாணவியின் தற்கொலை பற்றி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்துள்ளார்.

அதில், தஞ்சை மாணவியை மத மாற்றம் செய்ய முயன்றதாக எந்த புகாரும் இல்லை, சக மாணவர்களிடம் நடத்திய விசாரணையில் மத மாற்றம் குறித்த புகார் வைக்கப்படவில்லை. 30க்கும் மேற்பட்ட சக மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. மதமாற்றம் செய்ய முயற்சித்ததாக யாரும் புகார் தெரிவிக்கவில்லை.

மதம், சாதி, அரசியல் ரீதியான பாகுபாடுகளை எந்தக் காரணத்தைக் கொண்டும் ஏற்கமுடியாது. ஆனால் இங்கு மதமாற்ற முயற்சி நடந்ததாக யாரும் தெரிவிக்கவில்லை. மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள். மாணவ, மாணவியர் எந்த புகாராக இருந்தாலும் உடனடியாக தெரிவிக்க வேண்டும். இதை பற்றி முதலில் பெற்றோர்களிடம் தெரிவிக்க வேண்டும்.

அவசரப்பட்டு யாரும் தவறான முடிவை எடுக்க கூடாது. மாணவர்களுக்கு தங்களுக்கு விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தால் அதை பற்றி பேச வேண்டும். உடனடியாக ஹெல்ப்லைன் மூலம் புகார் தெரிவிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

  • sai abhyankkar is the music director for allu arjun atlee project அட்லீ-அல்லு அர்ஜுன் படத்துக்கு இவர்தான் மியூசிக்கா? பிளாஸ்ட்டா இருக்கே!