செம்மர கடத்தலின் போது போலீசார் மீது கோடாரிகளை வீசி தாக்கிய கும்பல் : தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 58 பேர் கைது!!
Author: Udayachandran RadhaKrishnan24 January 2022, 11:19 am
திருப்பதி : நெல்லூர் அருகே செம்மரம் வெட்டி கடத்த முயன்ற தமிழகத்தைச் சேர்ந்த 55 பேர் உட்பட 58 பேரை போலீசார் கைது செய்தனர். நாற்பத்தி ஐந்து செம்மரக்கட்டைகள், இருபத்தி நான்கு கோடாரிகள், 31 செல்போன்கள் 75 ஆயிரத்து 230 ரூபாய் பணம், கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி,கார் பறிமுதல்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ராப்பூர் வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்துவது பற்றி கிடைத்த தகவலை அடுத்து ராப்பூர் போலீசார் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது செம்மரங்களை வெட்டி லாரி ஒன்றில் ஏற்றிக்கொண்டு கும்பல் ஒன்று சென்று கொண்டிருப்பது பார்த்த போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர்.
அப்போது லாரியில் இருந்த செம்மரம் வெட்டும் கூலி தொழிலாளர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தி தப்ப முயன்றனர். இதனால் காவலர் ஒருவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் சாதுரியமாக அனைவரையும் சுற்றி வளைத்த போலீசார் பிடித்தனர்.
லாரியில் 45 செம்மரக்கட்டைகளும் 50க்கும் மேற்பட்டோரும் இருப்பது தெரியவந்தது.
மேலும் அவர்களுக்கு பாதுகாப்பாக கார் ஒன்றில் வந்த நபர்களையும் போலீசார் மடக்கி மொத்தம் தமிழகத்தை சேர்ந்த 55 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து ரூ.30 லட்சம் மதிப்பிலான 45 செம்மரக்கட்டைகள், மரம் வெட்ட பயன்படுத்தும் 24 கோடாரிகள், 31 செல்போன்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி, சொகுசு கார் மற்றும் 75,230 ரூபாய் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த தொழிலாளர்கள் உட்பட 58 பேரிடம் செம்மர கடத்தலில் தொடர்புடைய நபர்கள் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.