போலீஸுக்கும், அமைச்சருக்கும் என்ன அவசரம்..? எதையோ மூடி மறைக்க முயற்சி… மாணவி தற்கொலை விவகாரம்.. அண்ணாமலை கிளப்பும் சந்தேகம்..!!

Author: Babu Lakshmanan
24 January 2022, 6:20 pm

அரியலூர் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் எதையோ மூடி மறைக்க முயற்சி நடப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தேகம் கிளப்பியுள்ளார்.

அரியலூரைச் சேர்ந்த பள்ளி மாணவி தஞ்சையில் உள்ள உண்டு, உறைவிட பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். குடும்ப சூழ்நிலைக் காரணமாக 8ம் வகுப்பு முதல் அங்கேயே தங்கிதான் படித்து வந்தார். இப்படியிருக்கையில், அவரை மதம் மாறு விடுதி காப்பாளர் நெருக்கடி கொடுத்ததாகவும், இதனால், மன உளைச்சல் ஏற்பட்டு அவர் கடந்த வாரம் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். கடைசியாக அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட கட்சிகள், அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இதனிடையே, மாணவிக்கு மதமாற்றம் நெருக்கடி கொடுத்ததாக எந்தப்புகாரும் வரவில்லை என்று தஞ்சை மாவட்ட கண்காணிப்பாளர் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து, இன்று செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷும், தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தை யாரும் அரசியலாக்க வேண்டாம் என்றும், மேலும், பல்வேறு அமைப்புகள் குற்றம்சாட்டும் மதமாற்ற குற்றச்சாட்டை, விசாரணையின் போது யாருமே சொல்லவில்லை என தெரிவித்தார்.

காவல்துறை மற்றும் அமைச்சரின் இந்தக் கருத்துக்கள் பாஜக உள்ளிட்ட கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், அரியலூர் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் எதையோ மூடி மறைக்க முயற்சி நடப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தேகம் கிளப்பியுள்ளார்.

மேடை நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “சரிசமமாக அனைத்து உயிர்களும் ஒன்றுதான். ஒரு மரணத்தை வைத்து அரசியல் செய்யும் கட்சி பாஜக கிடையாது. எங்கள் டிஎன்ஏவிலும் அப்படியில்லை. பொத்தம் பொதுவாக ஏதம் பேசில்லை. அந்த மாணவி பேசிய வீடியோவை ஆதாரமாக கொண்டு, கம்பீரமாக உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரணை நடத்தி வருகிறது.

அந்த வீடியோவை பதிவு செய்த நபரை நாளை காலை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டு இருக்கிறது. இப்படியிருக்கையில், காவல்துறையினரும், அமைச்சரும் மதமாற்றத் தொந்தரவு ஏதும் கொடுக்கவில்லை என்கின்றனர். அவ்வளவு அவசரம் என்ன வந்தது?. எதையோ மூடி மறைக்க முயற்சி செய்கிறார்கள்,” எனக் கூறியுள்ளார்.

  • Game Changer Shankar songs cost“கேம் சேஞ்சர்”பட பாடலுக்கு இத்தனை செலவா…கோடிகளை மட்டுமே குறிவைக்கும் சங்கர்..!
  • Views: - 5847

    0

    0