உலக நாடுகள் நடவடிக்கை எடுத்தால் கொரோனாவை இந்த ஆண்டே முடிவுக்கு கொண்டு வரலாம்: WHO தலைவர் உறுதி!!
Author: Rajesh25 January 2022, 10:49 am
ஜெனீவா: உலக நாடுகள் விரிவான நடவடிக்கை எடுத்தால் கொரோனாவை இந்த ஆண்டே முடிவுக்கு கொண்டு வரமுடியும் என WHO தலைவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உலக நாடுகள் விரிவான நடவடிக்கை எடுத்தால் கொரோனாவுக்கு இந்த ஆண்டே முடிவு கட்டலாம் என்று உலக சுகாதார அமைப்பு தலைவர் கூறியுள்ளார். 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவில் கொரோனா வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்டது.
அதன்பிறகு இந்தியா உள்பட உலக நாடுகள் முழுவதும் பரவியது. 2 ஆண்டுகளுக்கு மேலாக கொரோனாவின் ஆதிக்கம் நீடித்து வருகிறது. டெல்டா, ஆல்பா, பீட்டா, காமா என்று உருமாறிய கொரோனா, ஒமைக்ரான் வைரசாகவும் உருமாறி உள்ளது.
டெல்டாவை விட வேகமாக பரவக்கூடியது என்பதால், ஒமைக்ரான் தொற்றால் உலகம் முழுவதும் மூன்றாவது அலை வீசி வருகிறது. இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று, சமூக பரவலாக மாறிவிட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரித்து வருவதால், ஏப்ரல் மாதத்துக்குள் கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விடும் என்று மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர். மேலும், இந்தியாவில் தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
இதுபோல், உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர் டெட்ராஸ் அதனம் கெப்ரிசியசும் இந்த ஆண்டுடன் கொரோனா முடிவுக்கு வந்து விடும் என்று கூறியுள்ளார். உலக சுகாதார அமைப்பின் செயற்குழுவின் 150வது அமர்வு நேற்று நடைபெற்றது. அதில், டெட்ராஸ் அதனம் கெப்ரிசியஸ் பேசியதாவது,
கொரோனாவை ஒழித்து கட்டுவதில் பிராந்திய, தேசிய, சர்வதேச ரீதியாக உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து பணியாற்றி வருகிறது. நாடுகளுக்கு தேவையான ஆதாரங்கள், வியூகங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவி அளித்து வருகிறது.
நாடுகள் இந்த வியூகங்களை பயன்படுத்தி, விரிவான நடவடிக்கை எடுத்தால், நாம் இந்த ஆண்டிலேயே கொரோனாவுக்கு முடிவு கட்டலாம். கொரோனாவில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, இதுபோன்ற நெருக்கடிகளை தடுக்க புதிய தீர்வுகளை உருவாக்க வேண்டும். தொற்று முடியும்வரை காத்திருக்கக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.