உ.பி. தேர்தலில் அடுத்தடுத்து திருப்பம் … பாஜகவுக்கு தாவிய ராகுலின் வலதுகரம்… அதிர்ச்சியில் உறைந்தது காங்கிரஸ்.!!
Author: Babu Lakshmanan25 January 2022, 3:30 pm
உத்தரபிரதேசம் : உத்தரபிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் மூத்த தலைவர் ஆர்பிஎன் சிங் பாஜகவில் இணைந்த சம்பவம் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 10ம் தேதி தொடங்கி மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் வரும் மார்ச் 10-ம் தேதி வெளியிடப்பட இருக்கிறது.இந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், எஐஎம்ஐஎம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் களமிறங்க உள்ளன.
சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், உத்தரபிரதேசத்தில் ஆளும் பாஜகவின் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து பதவியை ராஜினாமா செய்து அதிர்ச்சிக்குள்ளாக்கினர். இதனால், பாஜகவின் பலம் குறைந்து வருவதாக எதிர்கட்சிகள் கருதின.
இப்படியிருக்கையில், யாரும் எதிர்பார்க்காத விதமாக, சமாஜ்வாதி கட்சியின் நிறுவன தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான முலாயம் சிங்கின் இளைய மருமகள் அபர்னா யாதவ் பாஜகவில் இணைந்தார். வரும் சட்டப்பேரவை தேர்தலில் அபர்னா யாதவ் பாஜக சார்பில் போட்டியிடும் வாய்ப்பை பெறுவார் என்று தெரிகிறது. அதிலும், அகிலேஷ் யாதவ் போட்டியிடும் தொகுதியிலேயே அவரை களமிறக்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
இந்த நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவருமான ஆர்.பி.என் சிங் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகியது அக்கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸில் இருந்து விலகிய அவர் பாஜகவில் இணைந்தார். ராகுல் காந்திக்கு வலது கரம் போன்று இருந்தவரான ஆர்பிஎன் சிங், ராகுல் காந்திக்காக உத்தரபிரதேசத்தில் நிறைய போராட்டங்களை ஒருங்கிணைத்தவராவார். அவரை முன்னிலைப்படுத்தியே உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது. அவர் பாஜகவுக்கு தாவி இருப்பது காங்கிரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
இது பாஜகவில் இணைந்த பிறகு ஆர்பிஎன் சிங் கூறியதாவது, “32 ஆண்டு காலமாக நான் காங்கிரஸ் என்ற ஒற்றை கட்சியில்தான் இருந்தேன். முன்பு போல தற்போது காங்கிரஸ் கட்சி கிடையாது. எனவே, பாஜகவில் இணைந்து, முழு முயற்சியுடன் பிரதமர் மோடியின் புதிய இந்தியாவை உருவாக்க பாடுபடுவேன்,” எனக் கூறியுள்ளார்.