தூத்துக்குடியில் பட்டப்பகலில் பயங்கரம்…!! மது இல்லையென கூறி பார் ஊழியர் படுகொலை…! மதுபோதையில் இளைஞர்கள் வெறிச்செயல்…
Author: kavin kumar26 January 2022, 7:53 pm
தூத்துக்குடி : குடியரசு தின விடுமுறை மது இல்லையென சொன்னதால் கடை ஊழியரை படுகொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் குடியரசு தினத்தையொட்டி மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் பிளாக்கில் மது வாங்கி அருந்திய வாலிபர்கள் சிலர் மேலும் கூடுதலாக சரக்கு வாங்க பூட்டிய ஒவ்வொரு டாஸ்மாக் பார்களின் கதவை தட்டி ரகளை செய்துள்ளனர் ஆனால் அங்கு அவர்களுக்கு மது கிடைக்காத விரக்தியில் பார் பணியாளர் ஒருவரிடம் சண்டையிட்டு அவரை தாக்க சென்றபோது அங்கு பிளாக்கில் மது வாங்க காத்திருந்த 2-பேரை அறிவாளால் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு 2-பேர் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதி தாக்குதல் நடத்திய 3-பேரை கைது செய்து சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடியில் இன்று குடியரசு தினத்தை-யொட்டி மதுபான கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி லையன்ஸ்டோன் பகுதியினை சேர்ந்த 3 இளைஞர்கள் சில இடங்களில் பிளாக்கில் விற்பனை செய்யப்பட்ட மதுவினை வாங்கி காலை முதலே அருந்தி வந்துள்ளனர். ஆனாலும் அவர்களுக்கு சரக்கு தேவைப்பட்டு கொண்டே இருந்துள்ளது. ஒரு கட்டத்தில் சரக்கு அவர்களுக்கு எங்கு கேட்டும் கிடைக்காமல் இருந்துள்ளது. இதனால் அவர்கள் தூத்துக்குடியில் உள்ள பல்வேறு மதுபானக் கடைகளின் பார்களுக்கு சென்று பாரின் கதவை தட்டி மதுகேட்டு தகராறு செய்துள்ளனர். இப்படியே ஒவ்வொரு மதுகடைகளுக்கும் சென்று ரகளை செய்த 3 பேரும் இறுதியாக தூத்துக்குடி 4-ம் கேட் பகுதியில் உள்ள சின்னகன்னு புரம் பகுதியில் உள்ள மதுபானக் கடையின் பார் கதவை தட்டி மது கேட்டு ரகளை செய்துள்ளனர்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அந்த பாரில் பணியாற்றும் செல்வராஜ் என்பவர் அவர்களை ஏன் ரகளை செய்கின்றீர்கள், இன்று மதுகடைகள் லீவு என்று தெரியாதா என்று சத்தம்போட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டு அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர். ஆனால் மதுபோதையில் இருந்த 3 பேரும் அறிவாளுடன் மீண்டும் அங்கு வந்து பார் பணியாளர் செல்வராஜிடம் ரகளை செய்து அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு செல்லும்போது அங்கு பிளாக்கில் மது வாங்க வந்த தூத்துக்குடியை சேர்ந்த ராஜா மற்றும் மாடசாமி ஆகிய இருவரையும் அந்த கும்பல் அறிவாளால் தாக்கிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றனர்.
இதனை அந்த வழியாக சென்ற சிலர் கண்டு சிப்காட் காவல்துறை-க்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த செல்வராஜையும், காயமடைந்த ராஜா மற்றும் மாடசாமி ஆகிய இருவரையும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அரிவாளால் தாக்கி தப்பி சென்ற 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் பட்டபகலில் மதுபோதைக்காக அரிவாளால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.