கடலூரில் வீடு இடிந்து விழுந்து இரண்டு சிறுவர்கள் பலி : முதல்வர் நிதியுதவி அறிவிப்பு…
Author: kavin kumar27 January 2022, 4:53 pm
சென்னை : கடலூர் அருகே பாழடைந்து கிடந்த வீடு இடிந்து விழுந்து விபத்தில் உயிரிழந்த இரண்டு சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கடலூர் அடுத்த வடக்கு ராமாபுரம் எஸ்.புதூர் கிராமத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரம் அமைந்துள்ளது. இங்கு 100 வீடுகள் உள்ள நிலையில் இந்த சமத்துவபுரம் பின்பக்கம் இலங்கை தமிழர்களுக்கு வீடுகள் கட்டி தர தனியார் தொண்டு நிறுவனம் 2012 ம் ஆண்டு முன்வந்தது. அதன் பேரில் தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில் 2013 ம் ஆண்டு இலங்கை தமிழர்கள் மறுவாழ்வுக்கு வீடு கட்டி கொடுக்கப்பட்டது. மொத்தம் 130 வீடுகள் கட்டப்பட்டது.
அந்த வீடுகள் சரியில்லை தங்களை மீண்டும் அகதிகள் போல் அடைத்து வைக்கும் நிலையில் வீடுகள் உள்ளது என கூறி அதில் இலங்கை தமிழர்கள் குடியேற மறுத்து விட்டனர். இந்த நிலையில் கடந்த 2013 ம் ஆண்டு முதல் அந்த வீடுகள் பாழடைந்து உள்ளது.
அந்த இடத்தில் 130 வீடுகள் இருந்த நிலையில் அவ்வப்போது சமுக விரோத செயல்கள் அந்த வீடுகளில் நடைபெறுவதாக தொடர் குற்றசாட்டு எழுந்தது. மேலும் வீட்டில் இருந்த மின்சார வையர்கள் காணமால் போகிறது என புகார்கள் எழுந்தது. இந்த நிலையில் 130 வீடுகளில் பல வீடுகள் இடிந்து விழுந்த நிலையில் 50 வீடுகள் மட்டும் தற்போது பாழடைந்து காணப்பட்டது. இதனை தொடர்நது பெரியார் நினைவு சமத்துவபுரம் பகுதியில் உள்ள இளைஞர் சிலர் பாழடைந்த வீட்டிற்கு சென்று கேம் விளையாடுவது, தூங்கவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் இன்று மதியம் பாழடைந்த வீட்டிற்கு சென்ற சுதீஷ்குமார், வீரசேகரன்,புவனேஷ் ஆகிய மூன்று 17 வயது சிறுவர்கள் கேம் விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது அப்போது பாழடைந்த அந்த வீடு திடீரென முற்றிலும் இடிந்து விழுந்துள்ளது.
இடிந்த வீட்டில் சிக்கி கொண்ட 3 பேரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சம்பவம் தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 3 சிறுவர்களையும் மீட்டு கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனை செல்லும் வழியில் வீரசேகரன், சுதீஷ் குமார், ஆகியோர் உயிரிழந்தனர். புவனேஷ் எனும் சிறுவன் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையறிந்து சம்பவ இடத்திற்கு கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் விசாரணை நடத்தி மீதமுள்ள வீடுகளையும் பார்வையிட்டனர்.
இதனிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் நிதி உதவியும் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடலூர் மாவட்டம் ராமாபுரம் கிராமத்திலுள்ள பழைய கட்டடம் இடிந்து விழுந்ததில் வீரசேகர் மற்றும் சதிஷ் என்ற சிறுவர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தாருக்கு எனது வருத்தத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும், இவ்விபத்தில் காயமடைந்த சிறுவன் புவனேஷுக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்விபத்தில் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சமும், காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் சிறுவன் புவனேஷின் குடும்பத்தாருக்கு ரூபாய் ஐம்பதாயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரணநிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.