நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது..!!
Author: Rajesh28 January 2022, 10:40 am
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது.
பிப்ரவரி 4ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு 8 நாட்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. குறுகிய கால இடைவெளியில் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால் கூட்டணி கட்சிகள் வார்டு பங்கீடு பேச்சுவார்த்தையை முடுக்கி விடப்பட்டுள்ளது.
வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியிலும் அரசியல் கட்சிகள் மும்முரமாக இறங்கி உள்ளது. இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்குவதால் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் எங்கெங்கு வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என அந்தந்த பகுதிகளின் தேர்தல் அலுவலர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, வேட்பு மனுக்களை பெறுவதற்கு தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் இன்று காலை 10 மணி முதல் வேட்பு மனுக்களை அளித்து வருகின்றனர். பொங்கல் பண்டிகையின்போது 17ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த விடுமுறைக்கு பதிலாக ஜனவரி 29ம் தேதி அரசு அலுவலகங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, நாளை வேலை நாள் என்பதால் நாளையும் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.