வஉசியின் பேத்திக்கு உதவியதாக அமைச்சர் வெளியிட்ட செய்தி போலியா?…உண்மையை உடைத்த வஉசியின் மகன் வழி பேத்தி…!!
Author: Rajesh29 January 2022, 6:28 pm
மதுரை: மதுரையில் இருக்கும் அரசு ராஜாஜி மருத்துவமனையில் தனியாக கஷ்டப்பட்டு கொண்டு இருந்த வ.உ. சிதம்பரனாரின் கொள்ளுப்பேத்திக்கு உதவியதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்ட செய்தி உண்மை இல்லை என வ.உ.சியின் பேத்தி ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் பேத்தி என கூறப்படும் மேக்டலின் என்ற 45 வயது பெண் ஒருவர் உடல்நிலை குறைவாக மதுரையில் இருக்கும் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக இணையத்தில் தகவல் வெளியானது.
அவரின் உடல்நிலை மோசமான நிலையில் அங்கேயே தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும், ஆனால் இவரை உடன் இருந்து பார்த்துக்கொள்ள உறவினர்கள் யாரும் இல்லை, இதனால் மருத்துவமனையில் இவர் தனியாக கஷ்டப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் இதை பற்றிய செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மருத்துவமனையில் தனியாக சிகிச்சை பெறும் அவருக்கு உடனடியாக தமிழ்நாடு அரசு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வ.உ. சிதம்பரனாரின் கொள்ளுப்பேத்திக்கு தனி சிகிச்சை அளிக்கப்படி உத்தரவிட்டார். மதுரை அரசு மருத்துவமனை முதல்வரை போனில் தொடர்பு கொண்டு, வ.உ. சிதம்பரனாரின் கொள்ளுப்பேத்திக்கு தனி மருத்துவ குழுவை நியமிக்க வேண்டும், அவருக்கு முறையான கவனத்துடன் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இது தொடர்பாக பேஸ்புக்கிலும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண்மணி வ.உ.சிதம்பரனாரின் கொள்ளுப்பேத்தியே இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
வஉசியின் பேத்தியான மரகத மீனாட்சி ராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், வஉசியின் பிள்ளைகளில் யாருக்கும் பல்வேந்திரன் பிள்ளை என்ற பெயர் இல்லை. மேலும், மருத்துவமனையில் வஉசியின் பேத்தி என்று சிகிச்சை பெற்று வருபவரின் தாய் இஸ்ரேலை சேர்ந்தவர்கள் என்று சொல்வதில் உண்மை தன்மை இல்லை. ஏனென்றால், வஉசியின் குடும்பத்தை சேர்ந்த யாரும் இஸ்ரேல் பெண்ணை திருமணம் செய்யவில்லை. மேலும், எங்கள் குடும்பத்தில் அனைவரும் இந்துக்கள், யாரும் கிறிஸ்துவ மதத்திற்கு மாறவில்லை. அப்படி இருக்கையில் மேக்டலின் என்ற பெண் எப்படி வஉசியின் பேத்தியாக இருக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார். எனவே, வஉசியின் 150வது பிறந்தநாள் அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருவதால் அதனை பயன்படுத்தி போலி புகழை தேட கிளம்பியுள்ளனர் என மரகத மீனாட்சி குற்றம் சாட்டியுள்ளார். மேலும், போலியாக கிளம்பும் இதுபோன்ற நபர்களை கண்டறிந்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், வஉசியின் கொள்ளு பேத்திக்கு உதவியதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிவிட்டுள்ள செய்தியும் தற்போது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.