தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் : பலி கர்ம பூஜைகள் செய்து முக்கடலில் புனித நீராடினர்!!
Author: Udayachandran RadhaKrishnan31 January 2022, 11:23 am
கன்னியாகுமரி : தை அமாவாசையை முன்னிட்டு இன்று 16 வகை தீர்த்தங்களை கொண்ட முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களின் நினைவாக பலி கர்ம பூஜைகள் செய்து கடலில் புனித நீராடினர்.
இந்துக்களின் முக்கிய தினங்களில் ஆடி அமாவாசை , தை அமாவாசை ஆகிய நாட்களில் புண்ணிய நீர் நிலைகளுக்கு சென்று தங்கள் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் எனப்படும் பலி கர்ம பூஜைகள் செய்து நீர் நிலைகளில் புனித நீராடுவது இந்துகளில் மரபாக உள்ளது.
இந்த நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் லட்சுமி தீர்த்தம், காயத்திரி தீர்த்தம், விநாயகர் தீர்த்தம் உள்ளிட்ட 16 தீர்த்தங்களை கொண்ட முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் தங்கள் முன்னோர்கள் நினைவாக பலி கர்ம பூஜைகள் செய்து புனித நீராடுவதற்காக குமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை , தூத்துக்குடி , உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளாவில் இருந்தும் ஏராளமானோர் இன்று அதிகாலையிலே கன்னியாகுமரிக்கு வருகை தந்தனர்.
இங்குள்ள வேத விற்பனர்களிடம் எள், பச்சரிசி, தர்பை, பூ உள்ளிட்ட பொருட்களால் பூஜைகள் செய்து தங்கள் முன்னோர்களை நினைத்து முக்கடல் சங்கமத்தில் புனித நீராடினார்கள் .
இதை அமாவாசை நாட்களின் செய்வதால் தங்கள் முன்னோர்களால் சகல ஐஸ்வரியமும் கிடைப்பதாக தர்ப்பணம் செய்தவர்கள் தெரிவித்தனர் . முக்கடல் சங்கமத்தில் புனித நீராடியவர்கள் பின்னர் இங்குள்ள அருள்மிகு பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் பெற்று சென்றனர் . இந்த நிகழ்ச்சியையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.