முறிந்தது அதிமுக – பாஜக கூட்டணி..? அசராமல் அடுத்தடுத்து வேட்பாளர் பட்டியலை வெளியிடும் அதிமுக… தனித்து களமிறங்கும் பாஜக..!!

Author: Babu Lakshmanan
31 January 2022, 12:52 pm

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி முறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி மீண்டும் அமைத்தது. இந்தக் கூட்டணியில் பாமக உள்ளிட்ட கட்சிகளும் இடம்பெற்றிருந்தன. இந்தத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து, 2021ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலிலும் இதேக் கூட்டணி தொடர்ந்தது. அதிலும் அதிமுக கூட்டணி 66 இடங்களை மட்டுமே வென்றது. அதிமுகவுக்கு இந்தத் தேர்தல் மோசமானதாக இருந்தாலும், பாஜகவுக்கு சாதகமானதாகவே இருந்தது. ஏனெனில், முதன்முறையாக 4 இடங்களைக் கைப்பற்றியது.

இதனிடையே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பதற்கு முன்பே, அதிமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து பாமக வெளியேறி, தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்து விட்டது.

இதைத் தொடர்ந்து, பிப்.,19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகிவிட்டது. இதையடுத்து, கூட்டணி மற்றும் இடப்பங்கீடு குறித்து ஆலோனைகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. திமுகவை பொறுத்தவரையில், தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்திருப்பதால், கொடுப்பதை பெற்றுக் கொண்டு தேர்தலில் போட்டியிடும் நிலையில் கூட்டணி கட்சிகள் உள்ளன. எனவே, இழுபறியாக இருந்தாலும், பேச்சுவார்த்தையை இன்றுடன் முடிக்கும் முடிவை திமுக தலைமை கையில் எடுத்துள்ளது.

ஆனால், அதிமுகவைப் பொறுத்தவரையில் சற்று தலைவலிதான். மத்திய அரசின் நெருக்கடி, கூட்டணி கட்சிகளை அனுசரித்து போக வேண்டிய கட்டாயம் உள்ளிட்டவற்றால் சற்று தடுமாறி வருகிறது. இப்படியிருக்கையில், ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, எந்தவித நிபந்தனையுமின்றி அதிமுகவுக்கு ஆதரவை அளிப்பதாக தெரிவித்து விட்டது.

இதைத் தொடர்ந்து, பாஜக – அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைதான் தற்போது பேசுபொருளாகி விட்டது. இடப்பங்கீடு குறித்து இரு கட்சி நிர்வாகிகள் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிக இடங்களை கேட்டு பாஜக நெருக்கடி கொடுத்ததால் அக்கட்சியை கழற்றி விட அதிமுக திட்டம் செய்துள்ளது. அதுமட்டுமில்லாமல் அண்மையில் அதிமுக எம்எல்ஏக்கள் குறித்து பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசியது கூட அதிமுக தலைமைக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுவும் அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்கு முக்கியக் காரணமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அதிமுக, கூட்டணியைப் பற்றி கவலைப்படாமல், இன்று 2வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, கூட்டணி விவகாரத்தில் அதிமுக ஒரு முடிவை எடுத்து விட்டதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, தனித்து போட்டியிடுவது குறித்து பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட்டால், திமுகவுக்கு பெரும் நெருக்கடி கொடுக்கும் என்று தெரிகிறது.

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 2254

    0

    0