தாராபுரத்தில் சாலை தடுப்புச்சுவரில் மோதி கார் விபத்து : 3 பேர் பலி : ஒருவர் படுகாயம்…
Author: kavin kumar31 January 2022, 2:40 pm
திருப்பூர் : தாராபுரத்தில் சாலையின் தடுப்புச்சுவரில் சொகுசு கார் மோதியதில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இருந்து கோவை வேளாண் கல்வித்துறைக்கு சொகுசு கார் சென்று கொண்டிருந்தபோது தாராபுரம் அருகே உள்ள சாலக்கடை என்ற பகுதியில் தடுப்பு சுவரில் எதிர்பாராதவிதமாக சொகுசு கார் மோதியது. இதில் காரில் பயணம் செய்த நாகராஜ் (23), பிரேமலதா (43) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் கல்யாணசுந்தரம் (61), சுமித்ரா (19) ஆகியோர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்த தகவலறிந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்கு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படுகாயமடைந்த இருவரை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தாராபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கல்யாணசுந்தரம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் சுமித்ரா மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து மூலனூர் இன்ஸ்பெக்டர் செல்வன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.