அது அவங்க விருப்பம்… காலம்தான் பதில் சொல்லும் : கூட்டணி விவகாரத்தில் பாஜகவின் கருத்து பற்றி ஜெயக்குமார் அதிரடி..!!
Author: Babu Lakshmanan31 January 2022, 4:45 pm
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடும் பாஜக, எதிர்காலத்தில் அதிமுக கூட்டணியில் இருக்குமா…? என்பது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இடப்பங்கீடு விவகாரத்தில் உடன்பாடு ஏற்படாததால், அதிமுக – பாஜக கூட்டணியில் முறிவு ஏற்பட்டது. பாஜக தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்த அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் என்று கூறினார்.
இந்த நிலையில், பாஜகவின் நிலைப்பாடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது :- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இடப்பங்கீடு தொடர்பாக அதிமுக – பாஜக இடையே பேச்சுவார்த்தை சமூகமாகத்தான் நடைபெற்றது. ஆனால், அவர்களின் எதிர்பார்ப்பை எங்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை. மிகப்பெரிய இயக்கமான அதிமுகவின் நலன், கட்சியினரின் நலன் கருதை, அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியவில்லை. எனவே, அவர்கள் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளனர். இது எங்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது, எனக் கூறினார்.
அப்போது, 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரை கூட்டணி தொடரும் என அண்ணாமலை கூறியது குறித்த பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், ஊரக உள்ளாட்சி தேர்தல், சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜக எங்களின் கூட்டணியில் இருந்தது. இப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி இல்லை. எங்கள் தலைமையில் சில கட்சிகளுடன் இணைந்து மக்களை சந்திக்க உள்ளோம். எதிர்காலத்தில் கூட்டணியில் இருக்கிறதா இல்லையா? என்பதை கட்சிதான் முடிவு செய்யும், எனத் தெரிவித்தார்.