தை அமாவாசை : சதுரகிரி கோவிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்
Author: kavin kumar31 January 2022, 7:37 pm
விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் சாமி தரிசனம் செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில். கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோவிலில் சுந்தரமகாலிங்கம் சுயம்பு வடிவாக காட்சி தருகிறார். மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் மக்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக மாதம்தோறும் 4 நாட்கள் மட்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி பிரதோஷம் முதல் பிப்ரவரி 1ஆம் தேதி வரை பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்ட நிலையில் இன்று தை அமாவாசை தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் சதுரகிரி மலைப்பகுதியின் அடிவாரப் பகுதியான தாணிப்பாறையில் குவித்தனர்.
காலை 7 மணிக்கு பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட்டனர். மலையேறும் பக்தர்களிடமிருந்து பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த வனத்துறையினர் மாஸ்க் அணிந்து செல்ல வலியுறுத்தினர். பிற்பகல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுவர் . மேலும் மலைக் கோவிலில் பக்தர்கள் தங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் சாமி தரிசனம் செய்த உடன் மலையிலிருந்து இறங்க பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் மூலம் கூட்டம் கூட்டமாக மலை ஏறி சாமி தரிசனம் செய்தனர். அரசின் விதிமுறைகள் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது. இதனால் மேலும் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.