பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு : தேவையான உதவிகள் வழங்கப்படும் என உறுதி
Author: kavin kumar1 February 2022, 4:25 pm
மதுரை : கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த பள்ளிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில், மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று திடீர் ஆய்வினை மேற்கொண்டார்.
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் அனைத்தும், தமிழக அரசின் உத்தரவுக்கிணங்க இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து பள்ளிகளையும் திறக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டன. இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகேயுள்ள கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
வகுப்பறை கட்டிடங்களின் உறுதித்தன்மை, கழிப்பறை வசதி, கிருமிநாசினி பயன்படுத்துதல், சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜீவா, ஆசிரியர் மோசஸ் மங்கலராஜ் ஆகியோரிடம் கேட்டறிந்தார். மேலும் அப்பள்ளிக்கும், மாணவர்களுக்கும் தேவையான உதவிகளை தமிழக அரசு எப்போதும் செய்யும் எனவும் உறுதிமொழி அளித்தார்.