தேர்தல் விதியை மீறி ஆளுநருக்கு எதிராக தர்ணாவில் ஈடுபட்ட திமுக முன்னாள் எம்எல்ஏ : திடீரென வந்த போன் கால்.. திமுகவில் சலசலப்பு!!!
Author: Udayachandran RadhaKrishnan5 February 2022, 11:08 am
விழுப்புரம் பழையபேருந்து நிலைய அம்பேத்கர் சிலைமுன்பு நீட் மசோதாவை திருப்பி அனுப்பிய தமிழக ஆளுநரை திரும்ப பெறக்கோரி திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திடீரென தரையில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை தமிழக ஆளுநருக்கு அனுப்பி இருந்தது. நீட் மசோதாவினை தமிழக ஆளுநர் ஆர். என் ரவி மறு பரிசீலனை செய்ய தமிழக சபாநாயருக்கு அறிவுறுத்தி திருப்பி அனுப்பி இருந்தார்.
இதற்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்ற நிலையில் திமுக வானூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பராஜ் விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள அம்பேத்கர் சிலைமுன்பு இன்று நீட் மசோதாவை திருப்பி அனுப்பிய தமிழக ஆளுநரை திரும்ப பெறக்கோரி திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியதை தொடர்ந்து உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளதால் போராட்டத்தை கைவிட்டு செல்லுமாறு அறிவுறுத்தினார்.
இதனையடுத்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக தர்ணாவில் ஈடுபட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பராஜ் போராட்டத்தை கைவிட்டு சென்றார்.
மேலும் கட்சியின் தலைமைக்கும் மாவட்ட செயலாளருக்கு தெரிவிக்காமல் திடீரென முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டது திமுகவில் சலசலப்பினை ஏற்படுத்தியுள்ளது.