திமுக – விசிக இடையே முற்றுகிறதா மறைமுக போர் : திருமா., திடீர் ‘செக்’… முதலமைச்சர் ஸ்டாலின் ஷாக்..!!

Author: Babu Lakshmanan
5 February 2022, 5:29 pm

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி கடந்த 4 ஆண்டுகளாகவே திமுக தலைமையிடம் கறார் காட்டி வருகிறது.

தனிச்சின்னம்

2019 நாடாளுமன்ற தேர்தலின் போது, விசிகவுக்கு விழுப்புரம் மற்றும் சிதம்பரம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அப்போது அக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ரவிக்குமார் விழுப்புரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். ஆனால் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் பானை சின்னத்தில்தான் போட்டியிடுவேன் என்று மிகவும் உறுதியாக இருந்தார். அதன்படி போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றார்.

Thiruma updatenews360

கடந்த ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று திருமாவளவன் அதிரடி காட்டினார்.

அதனால் திமுக தலைமை 6 தொகுதிகளை மட்டுமே, விசிகவுக்கு ஒதுக்கியது. என்றபோதிலும் 4 தொகுதிகளில் விசிக வெற்றி பெற்றது.

திமுக ஆட்சி அமைத்த பிறகு, முதலமைச்சர் ஸ்டாலினிடம் இருந்து திருமாவளவன் சற்று விலகியே, நிற்கிறார். கூட்டணியில் தனது கட்சிக்கு ஏதாவது சிக்கல் என்றால், அதற்கு எதிராக குரல் கொடுக்கவும் அவர் தயங்குவதில்லை. சில மாதங்களுக்கு முன்பு சேலம் மாவட்டத்தில் விசிக கொடி ஏற்ற அனுமதி வழங்கப் படவில்லை என்பதற்காக போலீசாருக்கு எதிராக மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்தார்.
இதையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின், திருமாவை அழைத்துப் பேசி பிரச்சனைக்கு தீர்வு கண்டார்.

இந்த நிலையில்தான் வருகிற 19-ம் தேதி நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் எதிர்பார்த்த வார்டுகள் ஒதுக்கப்படாத ஒரு சில மாவட்டங்களில் திமுகவுக்கு எதிராக விசிக தனது வேட்பாளர்களை தனித்து களம் இறங்கியுள்ளது.

திருமா வரவேற்பு

இப்படி திமுகவுக்கு அவ்வப்போது, அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் கூட்டணிக் கட்சியான
விசிகவின் தலைவர் திருமாவளவன் தற்போது இன்னொரு அதிரடி காட்டி இருக்கிறார்.

டாஸ்மாக் பார் உரிமம் வழங்குவது தொடர்பான டெண்டரை எதிர்த்து தாக்கல் செய்த டாஸ்மாக் நிர்வாகத்தின் வழக்கை தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட், தமிழகம் முழுவதும் உள்ள அத்தனை டாஸ்மாக் மதுபார்களையும், அடுத்த 6 மாதங்களுக்குள் டாஸ்மாக் நிறுவனம் மூட வேண்டும் என்று உத்தரவிட்டு இருப்பதற்கு திருமாவளவன் வரவேற்பு தெரிவித்திருக்கிறார்.

2003ல் இருந்து பார்கள் இயங்கி வந்தாலும், அது சட்டப்படியானதாக இல்லை. எனவே, சட்டத் திருத்தம் வரும் வரை, விதிகள் வகுக்கப்படும் வரை, நொறுக்குத் தீனி வியாபாரம், காலி பாட்டில்களை சேகரிப்பதற்கு, டாஸ்மாக் நிறுவனம் உரிமம் வழங்க தடை விதிக்கப்படுகிறது. டெண்டரை திரும்பப் பெற, டாஸ்மாக் நிறுவனம் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த பார்களை, 6 மாதங்களில் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சென்னை ஐகோர்ட் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.

படிப்படியாக மதுவிலக்கு

இதுகுறித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில், “மது விற்பனை செய்யும் ‘டாஸ்மாக்’ கடைகளோடு சேர்த்து மது அருந்தும் கூடங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டிருப்பதை ரத்து செய்வதாகவும், அவ்வாறு உரிமம் வழங்க டாஸ்மாக் நிறுவனத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும், எனவே 6 மாதங்களுக்குள் மது அருந்தும் கூடங்கள் அனைத்தையும் மூட வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சரவணன் வழங்கியுள்ள தீர்ப்பைப் பாராட்டி வரவேற்கிறோம். தமிழக அரசு மதுவிலக்குக் கொள்கையைக் கொஞ்சம் கொஞ்சமாக நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் 1937-ம் ஆண்டில் இயற்றப்பட்ட மதுவிலக்குச் சட்டம்தான் இன்னும் நடைமுறையிலிருக்கிறது. அந்த சட்டத்தின் பிரிவு 4 (a)-இன் படி பொது இடத்தில் ஒருவர் குடிபோதையில் காணப்பட்டால் அவருக்கு 3 மாதம் சிறைத்தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கலாம்.

டாஸ்மாக் கடைகளோடு மது அருந்தும் கூடங்களை சேர்த்து நடத்தும்போது அங்கே மது அருந்துபவர் அருந்திய பின்னர் பொது இடங்களின் வழியாகத்தானே வீட்டுக்குச் செல்ல முடியும்?” என்று நீதிபதி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Stalin and thiruma- Updatenews360

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யாமல் மது அருந்தும் கூடங்களை மூடுவதற்கு தமிழக அரசு முன் வரவேண்டும் என வலியுறுத்துகிறோம்.

‘மதுவிலக்கை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 47-ல் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

திமுக ஆட்சிக்கு வந்தால் ‘மதுவிலக்கை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என திமுக தலைவர் கருணாநிதி 2015-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் அறிவித்ததையும் தமிழக முதலமைச்சருக்கு நினைவூட்டுகிறோம். எனவே, தமிழகத்தில் படிப்படியாக முழுமையாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று திருமாவளவன் குறிப்பிட்டு இருக்கிறார்.

திமுக அரசுக்கு செக்

இதுபற்றி அரசியல் பார்வையாளர்கள் கூறும்போது, “தமிழகத்தில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. இது மாநிலத்தில் இருக்கும் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கையை விட மிகவும் அதிகம் என்கிறார்கள்.

இது தவிர, சுமார் 3700 பார்கள் வரை மதுபானக் கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் நடப்பாண்டில் மட்டும்1550 டாஸ்மாக் பார்கள், தொடங்கப்பட்டுள்ளன. அதே நேரம் புதிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவதிலும், புதிய கல்வி நிறுவனங்களையும் தொடங்குவதிலும் தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

தமிழக அரசுக்கு மதுபான விற்பனை மூலம் மட்டும் ஆண்டுக்கு 33 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. இதில் பாதி அளவிற்காவது மது பார்களுக்கு வருமானம் கிடைக்கலாம். இந்தக் கணக்கின்படி பார்த்தால் ஆண்டுக்கு சுமார் 50,000 கோடி ரூபாய் மதுவால் விரயமாகிறது.

இப்படி மது போதைக்கு அடிமையாகி குடும்பத்தின் பொருளாதார நிலைமை பெரிதும் பாதிக்கப்படுவது ஏழை மற்றும் நடுத்தர வர்க்கம்தான் என்பது திருமாவளவனுக்கு நன்றாகவே தெரியும்.

அதனால்தான் அவர் டாஸ்மாக் மதுபார்களை 6 மாதங்களுக்குள் மூட வேண்டும் என்று, திமுக அரசை வலியுறுத்துகிறார் அதுமட்டுமல்லாமல், ஏற்கனவே திமுக அறிவித்தது போல தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளையும் மூட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஸ்டாலினை கேட்டுக்கொண்டிருக்கிறார்.

இது திமுகவுக்கு விசிகவால் பொதுவாக சொல்லப்பட்ட அறிவுரை என்றாலும்கூட அரசியலைப் பொறுத்த வரை திமுக அரசுக்கு திருமாவளவன் வைத்த ‘செக்’ ஆகவே பார்க்கப்படுகிறது.

எதிர்காலத்தில் தேர்தல் கூட்டணிக்காக, திருமாவளவனின் விசிக
டாஸ்மாக் மதுக்கடைகளை முற்றிலுமாக மூடவேண்டும் என்ற கோரிக்கையை பிரதான ஆயுதமாக பயன்படுத்த கூட வாய்ப்பு உள்ளது” என்று அந்த அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

திருமாவளவன் உண்மையிலேயே, தன் மனதில் தோன்றியதைத்தான் சொன்னாரா? என்பதை அறிய இன்னும் 6 மாதங்கள் வரை காத்திருக்கவேண்டும்!

  • Allu Arjun arrest and controversy பூகம்பமாய் வெடிக்கும் அல்லு அர்ஜுன் பிரச்சனை…வீட்டின் முன்பு கலவரம்…கண்டுகொள்ளாத போலீஸார்..!
  • Views: - 1358

    0

    0