நகர்புற உள்ளாட்சி தேர்தல் : கோவையில் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்த அமைச்சர்
Author: kavin kumar5 February 2022, 10:39 pm
கோவை: கோவையில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிமுகம் செய்து வைத்தார்.
பொள்ளாச்சி, ஈச்சனாரி, குனியமுத்தூர், மசக்காளிபாளையம், கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம் பகுதிகளில், நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில், திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிமுகம் செய்து வைத்தார். இதைத்தொடர்ந்து, அமைச்சர் பேசுகையில்;- கோவை மாநகராட்சியில் 100 இடங்கள், 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகள், வருவாய் மாவட்டத்தில் இடங்களில் 811 இடங்களில் தேர்தல் நடைபெறுகின்றது.
நமது இடத்தில் 100 சதவீதம் வெற்றி பெற்றோம் என்ற நிலையை நாம் கொண்டு வர வேண்டும்.திமுகவின் சாதனைகளை, 8 மாத காலத்தில் வரலாற்று சிறப்பு மிக்க சாதனைகளை முதல்வர் செய்துள்ளார். இதை மக்கள் மத்தியில் நீங்கள் கொண்டு செல்ல வேண்டும். பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், ஆவின் பால் விலை குறைப்பு, நகைகடன் தள்ளுபடி, மக்களை தேடி மருத்துவம், வீடு தேடி கல்வி, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என முதல்வர்களுக்கெல்லாம், முதல்வராக தமிழகத்தில் நல்லாட்சியை தந்து கொண்டுள்ளார் நமது முதல்வர்.
இந்த சாதனைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்லுங்கள், முதியோர் உதவித்தொகை, சாலை போட வேண்டுமா? என அனைத்து அடிப்படை வசதிகளையும் நாம் மக்களுக்கு செய்யலாம், அதை மக்களிடம் கூறி வாக்கு கேளுங்கள். நாம் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும். வீடு வீடாக சென்று வாக்கு சேகரியுங்கள். நமக்கு வாக்களிக்க மக்கள் தயாராக உள்ளனர். அதை வாக்குகளாக மாற்ற வேண்டியது அவசியம். என்று பேசினார்.