காங். எம்பிக்கு எதிராக திமுக கொந்தளிப்பு :நீட் விவகாரத்தில் ‘பளார்’!!
Author: Udayachandran RadhaKrishnan6 February 2022, 7:10 pm
கடந்த ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக அளித்த மிக முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்தே நீட் தேர்வை ரத்து செய்வதாகத்தான் இருக்கும் என்பது.
நீட் ரத்துக்கான ரகசியம் எங்கே?
அப்போது பிரச்சார கூட்டங்களில் பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, அதற்கான ரகசியம் எங்களுக்கு மட்டுமே தெரியும் என்று பரபரப்பாக குறிப்பிட்டும் இருந்தார்.
தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு கடந்த செப்டம்பர் மாதம் 13-ம் தேதி நீட் தேர்வில் இருந்து மாணவர்களுக்கு விலக்கு அளிக்கக் கோரும், சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, அது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மாநில ஆளுநருக்கு அனுப்பியும் வைக்கப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி ஏ கே ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் ஆய்வறிக்கையின்படி இச் சட்டம் நிறைவேற்றப்பட்டு இருந்தது, குறிப்பிடத்தக்கது.
நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர்
ஆனால் செப்டம்பர் மாதம் 18-ம் தேதி தமிழகத்தின் புதிய ஆளுநராக பதவி ஏற்றுக்கொண்ட ஆர் என் ரவி, கடந்த 1-ம் தேதி இந்த சட்ட மசோதாவை, ஏற்றுக்கொள்ள இயலாது என்று கருத்து தெரிவித்து தமிழக சட்டப்பேரவை சபாநாயகருக்கே அதைத் திரும்ப அனுப்பி வைத்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் ரவிக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்ப்பும் தெரிவித்துள்ளன.
இதைத் தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வருகிற 8-ம் தேதி சட்டப் பேரவையின் சிறப்பு கூட்டத்தை கூட்டி நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க கோரும் சட்ட மசோதாவை நிறைவேற்றி மீண்டும் ஆளுநருக்கு அனுப்ப ஏற்பாடு செய்ய நடவடிக்கை மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது.
அனைத்து கட்சி கூட்டம் : அதிமுக, பாஜக புறக்கணிப்பு
இந்தக் கூட்டத்தில் அதிமுகவும் பாஜகவும் பங்கேற்காமல் புறக்கணித்தன. எனினும், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி எம்பியுமான கார்த்தி சிதம்பரம் நீட் தேர்வு குறித்து தன் மனதில் பட்டதை செய்தியாளர்களிடம் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். இது தமிழகத்தை ஆளும் திமுகவுக்கு பெரும் அதிர்ச்சி தருவதாக அமைந்துள்ளது.
நீட் தேர்வுக்கு காங்கிரஸ் எம்பி ஆதரவுக்கரம்
அப்படி சிவகங்கையில் செய்தியாளர்களிடம் கார்த்தி சிதம்பரம் எம்பி என்னதான் பேசினார்?… “நீட் தேர்வில், தமிழகத்திற்கு மட்டும் விலக்கு கேட்டு போராடி வருகின்றனர். நான், நீட் தேர்வை ஆதரிக்கிறேன். நீட் தேர்வு குறித்து பேசுவதற்கு முன், அந்த தேர்வு இல்லாமல், மருத்துவப் படிப்புக்கு மாணவர்கள் தேர்வான முறை பற்றி விரிவாக பார்க்க வேண்டும். முன்பு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் தான், மாணவர் சேர்க்கை நடந்தது.
அப்போது மருத்துவக் கல்லூரியில் சேர, 1 சதவீத அளவுக்கு தான், கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதே நேரம், நீட் தேர்வுக்கு பின், அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு, 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இதனால், கிராமப்புற மாணவர்களுக்கு கூடுதல் இடம் கிடைத்து வருகிறது.
நீட் தேர்வே வேண்டாம் என்று சொல்வதில் அர்த்தமில்லை. ஆனால், தமிழகத்தில் இது ஒரு பெரும் விவாதமாக்கப்பட்டு விட்டதால், எல்லாவற்றையும் கல்வியாளர்களும், புள்ளியியல் நிபுணர்களும்
புள்ளி விவரங்களுடன் ஆராய்ந்து, ஒரு முடிவுக்கு வர வேண்டும்.
குறிப்பாக நீட் தேர்வு அமல்படுத்தப்பட்ட பின், தமிழகத்தில் எத்தனை கிராமப்புற மாணவர்கள், மருத்துவக் கல்லுாரியில் சேர்க்கப்பட்டனர்? நீட் தேர்வு வருவதற்கு முன், எத்தனை பேர் தேர்வு செய்யப்பட்டனர்? என்பதை ஆராய வேண்டும். அதன் பின், தெளிவான தீர்வை கண்டறிய வேண்டும்.
நீட் தேர்வால், மருத்துவக் கல்லூரியில் சேரும் மாணவர்கள், தகுதி மிக்கவர்களாக உள்ளனர் என்ற வாதம் முன்வைக்கப்பட்டாலும், அந்த மாணவர்கள், பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற பின், நீட் தேர்வுக்காக தனியாக ‘கோச்சிங்’ செல்ல வேண்டியுள்ளது. அதற்கு நிறைய செலவாகிறது என்பதையும் ஏற்கத்தான் வேண்டும்.
தனியார் கோச்சிங் சென்டர்களில் சேரும் வாய்ப்பு, கிராமப்புற மாணவர்களுக்கு கிடைப்பதில்லை. அதற்கான வசதியும் அவர்களுக்கு இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அதே நேரம், நீட் தேர்வுக்கு முந்தைய நிலையிலேயே, மருத்துவக் கல்விக்கான சேர்க்கை நடத்துவதாக வைத்துக் கொண்டால் என்னவாகும்?
பிளஸ் 2 மதிப்பெண் தான், மருத்துவக் கல்லுாரியில் சேரும் மாணவனின் தகுதியை தீர்மானிக்கும் என்ற நிலையில் ராசிபுரம், நாமக்கல் பள்ளிகளில் நடந்ததுதான் நடக்கும். மாணவர்களை அதி
காலை 4 மணிக்கு எழுப்பி விடுவார்கள். இரவு 12 மணி வரை பாடங்களை படிக்கச் சொல்வர்கள். மாணவர்கள் மனப்பாடம் செய்து, அதை திருப்பி எழுதுவார்களே தவிர, எந்த பாடத்தையும் புரிந்து படிக்க மாட்டார்கள்.
இந்தக் குறைபாட்டை எப்படி நீக்குவது? அதற்காக தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. நீட் தேர்வு சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுகிறது என்றதும், தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன், பாடத்திட்டத்தில் நிறைய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது.
அதன்பிறகு, நீட் தேர்வில், தமிழக பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்படும் கேள்விகளும் அதிகம் இடம் பெற்றன. இதனாலும், தமிழக மாணவர்களின் தேர்ச்சி அதிகம் ஆனது. அதனால் தான், புள்ளி விவரங்களோடு எல்லா விஷயங்களையும் ஆய்வு செய்து, விவாதித்து, நல்ல முடிவுக்கு வரவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
ஒருவேளை, தமிழக அரசு கேட்பது போல, தமிழகத்துக்கு மட்டும் நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கிறது என வைத்துக் கொள்வோம். தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு சென்று, மருத்துவம் பயில விரும்பும் மாணவர்களின் நிலை என்னாகும்?
அப்போதும் கூட, நம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதித் தானே ஆக வேண்டும்? இப்படி பல்வேறு குழப்பங்கள் இருக்கின்றன. எனவே, நீட் தேர்வை புள்ளி விவரங்கள் அடிப்படையில்தான் அணுக வேண்டுமே தவிர, உணர்வு ரீதியில் இதை அணுகக் கூடாது
நீட் தேர்வுக்கு முன்பு பிளஸ்-2 மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெற்றபோது அரசு பள்ளி மாணவர்கள் பயன் அடையவில்லை. நீட் தேர்வு வந்த பின்னரும் அதிக அளவில் கிராமப்புற மாணவர்கள் பயனடையவில்லை.
அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்த பின்னர்தான் கிராமப்புற மாணவர்கள் மருத்துவ கல்லூரிக்கு வர முடிந்தது. எனவே நீட் தேர்வு இருந்தாலும் இல்லாவிட்டாலும் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
கார்த்தி சிதம்பரம் சொன்ன 2 விஷயங்கள்
இந்த பேட்டியின் மூலம் கார்த்தி சிதம்பரம் எம்பி, நீட் தேர்வு தொடர்பாக 2 விஷயங்களை முன்வைப்பது புரியும். அதாவது நீட் தேர்வு தொடர்பான புள்ளிவிவரங்களை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். அடுத்து தற்போது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழகத்தில் அளிக்கப்பட்டு வரும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற புதிய கோரிக்கையை அவர் திமுக அரசுக்கு வைக்கிறார். இது திமுக கூட்டணிக் கட்சியினரை, கொந்தளிப்பில் ஆழ்த்தி உள்ளது.
அரசியல் விமர்சகர்கள் கருத்து
இதுபற்றி டெல்லியில் அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, “நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க கோரும் சட்ட மசோதாவை, கூட்டணி கட்சி என்ற அடிப்படையில் காங்கிரஸ் தலைமை ஏற்றுக்கொண்டாலும் கூட, தனிப்பட்ட முறையில் அதை கார்த்தி சிதம்பரம் எம்பி, விரும்பவில்லை என்றே தெரிகிறது. அதற்கு முக்கிய காரணம் அவருடைய தாயார் நளினி சிதம்பரமாக இருக்கலாம் என்பதை யூகிக்க முடிகிறது. ஏனென்றால் 2017-ம் ஆண்டு நீட் தேர்வுக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு முன்பாக நளினி சிதம்பரம் வாதாடி அதில் வெற்றியும் பெற்றார்.
நளினி சிதம்பரம் ஆதரவு
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வே நீட் தேர்வு விவகாரத்தில் இறுதி தீர்ப்பளித்து விட்டதால், இனி நீட் தேர்வு நடத்துவதை எதிர்த்து யாராலும் கோர்ட்டுகளை நாட முடியாது. எனவே நீட் தேர்வு என்பது இனி தொடரத்தான் செய்யும் என்று உறுதிபடக் கூறினார்.
தாயார் பிரபல வக்கீல் என்பதால், நீட் தேர்வு தொடர்பாக சில கேள்விகளையும் கார்த்தி சிதம்பரத்திடம் எழுப்பி அதற்கு நளினி சிதம்பரம் விளக்கம் அளித்திருக்கவும் வாய்ப்புள்ளது. அதனடிப்படையில் நீட் தேர்வு குறித்து தனது எண்ணங்களை கார்த்தி சிதம்பரம் எம்பி செய்தியாளர்களிடம் தற்போது வெளிப்படுத்தி இருக்கலாம். என்றபோதிலும், அவருடைய இந்த பேட்டி, திமுக தலைமைக்கு எதிராக உயர்த்தியிருக்கும் போர்க்கொடியாகவே பாஜக மேலிடம் கருதுகிறது.
ஏனென்றால், நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் சட்ட மசோதாவை மீண்டும் நிறைவேற்ற முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ள நிலையில் கார்த்தி சிதம்பரம் இந்தக் கருத்தை தெரிவித்திருக்கிறார்” என்று அந்த டெல்லி அரசியல் விமர்சகர்கள் குறிப்பிட்டனர்.