ஆயிரமாவது போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி : 2022ம் ஆண்டில் முதல் வெற்றியை பதிவு செய்த இந்தியா!!!

Author: kavin kumar
6 February 2022, 8:43 pm

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டி இந்தியாவின் 1,000-வது ஒருநாள் போட்டி என்பதால் கூடுதல் கவனத்தை ஈர்த்தது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 43.5 ஓவரில் 176 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியினரின் பந்துவீச்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி சிக்கியது. அந்த அணியில் ஜெசன் ஹோல்டர் அரை சதமடித்து 57 ரன்னில் அவுட்டானார்.

ஒரு கட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 79 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அடுத்து இறங்கிய ஹோல்டர்- ஆலன் ஜோடி பொறுப்புடன் ஆடியது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்களை கடந்தது. இந்தியா சார்பில் சாஹல் 4 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டும் பிரிசித் கிருஷ்ணா 2 விக்கெட்டும், சிராஜ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். 177 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய இந்திய அணியின் கேப்டனும் தொடக்க வீரருமான ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார்.

51 பந்தில் 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 60 ரன்கள் அடித்தார். முதல் விக்கெட்டுக்கு ரோஹித்தும் இஷான் கிஷனும் இணைந்து 84 ரன்களை குவித்தனர். ரோஹித் ஆட்டமிழந்த அதே ஓவரிலேயே விராட் கோலியையும் 8 ரன்னில் வீழ்த்தினார் அல்ஸாரி ஜோசஃப்.இஷான் கிஷன் 28 ரன்னிலும், ரிஷப் பண்ட் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் சூர்யகுமார் யாதவும் (34) தீபக் ஹூடாவும் (26) இணைந்து பொறுப்புடன் ஆடி இலக்கை எட்டினர். 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி 1-0 என ஒருநாள் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 1821

    0

    0