அரசு மரியாதையுடன் லதா மங்கேஷ்கரின் உடல் தகனம்…! காற்றில் கலந்தது இசைக்குயில்…!!
Author: kavin kumar6 February 2022, 9:42 pm
மும்பை சிவாஜி பூங்காவில் பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
பிரபல பின்னணி பாடகியான லதா மங்கேஷ்கருக்கு கடந்த ஜனவரி மாதம் 8ம் தேதி கொரோனா தொற்று உறுதியான நிலையில் கிட்டதட்ட ஒரு மாதம் தொடர் சிகிச்சையில் இருந்த அவர், இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவால் திரையுலகினரும் ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் பிரதமர், குடியரசு தலைவர், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் , திரையுலகினர் உள்ளிட்ட ஏராளமானோர் தங்களது இரங்கலை தெரிவித்தனர்.
தொடர்ந்து, அவரது உடல் பிற்பகல் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. பின்னர், ஊர்வலமாக சிவாஜி பூங்காவிற்கு கொண்டு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். சிவாஜி பூங்காவில் மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் பகத்சிங் கோஷ்யாரி, முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மற்றும் அவரது குடும்பத்தினர், அமைச்சர்கள் மற்றும் பலர் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
லதா மங்கேஷ்கர் உடலுக்கு முப்படைகள் மற்றும் மகாராஷ்டிர காவல் துறையினர் இறுதி மரியாதை செய்தனர். இதன் பின்னர் முழு அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில், மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், பாலிவுட் நடிகர் ஷாருக், பாடலாசிரியர் ஜாவேத் அக்தர், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.