நீட் விவகாரத்தை வைத்து கூட்டணி வலையை விரிக்கும் பாமக… முட்டுக்கட்டையாக இருக்கும் விசிக : மாற்றி யோசிக்கும் ராமதாஸ்..!!

Author: Babu Lakshmanan
8 February 2022, 2:08 pm

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரிய மசோதாவை ஆளுநர் ஆர்என் ரவி திருப்பி அனுப்பினார். இது தமிழகத்தில் பெரும் அரசியல் பிரளயத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டி, சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத் தொடரை கூட்டுவது என்றும், அதில் ஆளுநர் கூறியதை சரி செய்து விட்டு, மீண்டும் மசோதாவை நிறைவேற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது.

kalaivaanar arangam - updatenews360

அதன்படி, இன்று சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியதும் சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் எழுதிய கடிதத்தை வாசித்தார். பின்னர், ஆளுநர் குறிப்பிட்டுள்ள கருத்துகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார். பின்னர், ஆளுநரின் செயல் குறித்து அனைத்து கட்சியினரும் பேசுவதற்கு சபாநாயகர் வாய்ப்பு வழங்கினார்.

அதன்படி, பாமக எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் பேசியதாவது :- எந்த ஆளுநரும் சட்டங்களை திருப்பி அனுப்பவில்லை. சட்டங்கள் அனைத்தும் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டன. நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியதற்கு ஆளுநர் கூறிய காரணங்கள் ஏற்கத்தக்கதல்ல. புதிய நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற செயல்திட்டம் தேவை. நீட் விலக்கு மசோதாவுக்கு பாமக ஆதரவு தெரிவிக்கிறது, எனக் கூறினார்.

சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதாவுக்கு பாமக ஆதரவு அளித்ததில் எந்த ஒரு அதிர்ச்சியும் இல்லாத நிலையில், அண்மை காலமாக திமுகவின் நடவடிக்கைகளுக்கு பாமக பாராட்டு தெரிவித்து வந்ததை, இன்றைய நிகழ்வோடு ஒப்பிட்டு பார்க்கையில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

நடந்து முடிந்த தேர்தலில் பாமகவுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காத நிலையில், அதிமுகவில் இருந்து முதல் கட்சியாக கூட்டணியை முறித்தது. இதைத் தொடர்ந்து, பாமகவுக்கு சரிந்த செல்வாக்கினை சுட்டிக் காட்டி, கட்சி நிர்வாகிகளிடம் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கடுமையாக பேசியதும் காண முடிந்தது. அதிமுக, பாஜகவை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி கட்சிகள் தாக்கி பேசிய நிலையிலும், பாமக தமிழக அரசுக்கு எதிரான கருத்துக்களை தவிர்த்து வந்தது.

எப்படியாவது திமுக கூட்டணியில் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அதற்கு காரணம் என்றும், அதனால்தான் பாமக அடக்கி வாசிப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர். பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸும் முதலமைச்சர் ஸ்டாலினை பாராட்டிய பேசியதாகவும் சொல்லப்படுகிறது.

கடந்த இரு மாதங்களுக்கு முன்பு சேலம் வந்த முதலமைச்சர் ஸ்டாலின், தனக்கும், சேலத்திற்கும் உள்ள தொடர்பை நெகிழ்ச்சியுற வெளிக் கூறினார். அந்த சமயத்தில் பாமகவை சேர்ந்த மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம் மற்றும் பாமக மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முதல்வர் ஸ்டாலினை மனம் திறந்து பாராட்டினர்.

அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பாமக எல்எல்ஏ அருள், “மாற்றான் தோட்டது மல்லிகைக்கும் மனம் இருக்கும் என்ற அண்ணாவின் பேச்சுக்கு ஏற்ப அனைத்து தொகுதி மக்களுக்கும் அனைத்து உதவிகளையும் முதலமைச்சர் ஸ்டாலின் செய்து வருகிறார். இந்த ஆட்சியில் துண்டு சீட்டில் மனு அளித்தாலும் அதனை நிறைவேற்றும் நிலை உள்ளது. சேலத்தில் கடந்த மாதம் அமைச்சரிடம் துண்டு சீட்டில் கொடுத்த மனுவிற்கு விடையாக முதியோர் உதவி தொகை கிடைத்துள்ளது,” என்று திமுக ஆட்சியை பாராட்டினார்.

அதேபோல, மேட்டூர் தொகுதி பாமக எம்எல்ஏ சதாசிவம் கூட, “கடந்த காலங்களில் உள்ள முதல்வர்களை விட மிக எளிமையான முதல்வராக தமிழக முதல்வர் செயல்பட்டு வருகிறார்,” என்று புகழ்ந்து தள்ளினார். பாமக எம்எல்ஏக்களின் இந்தப் பேச்சு பிற எதிர்கட்சி தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. எதிர்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியின் மாவட்டம், அதிமுகவின் கோட்டையாக இருந்து வருகிறது. அதற்கு பக்க பலமாக இருந்தது பாமகவும்தான்.

இந்த சூழலில், சேலத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை பாமக எம்எல்ஏக்கள் புகழ்ந்து பேசியது அதிமுகவினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, திமுகவுக்கு பாமக ஆதரவு கொடுத்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் திமுக கூட்டணியில் பாமக இணைய விரும்புவதாகவும், ஆனால் அதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தடை போடுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனவே, கூட்டணிக்கான திட்டத்தை ராமதாஸ் வகுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Thirumavalavan- updatenews360

ஒரு உறையில் ஒரு கத்திதான் இருக்க முடியும் என்பதைப் போல, திமுக கூட்டணியில் பாமக இல்லையெனில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, என ஏதாவது ஒரு கட்சிதான் இருக்கும். ஏனெனில் இரு கட்சிகளுக்கும் அவ்வளவு பொருத்தம்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…