உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பது உண்டு. அந்த வகையில் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில், சூர்யா முக்கிய வேடத்தில் நடித்து வெளியான திரைப்படம் ‘ஜெய்பீம்’. ஓடிடி தளத்தில் கடந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியான இந்த திரைப்படம் மொழி, இனம், கடந்து சர்வதேச அளவில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது.
இந்த திரைப்படம் 1990களில் நடந்த உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் மீது செய்யாத தவறுக்காக காவல்துறையால் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்களை தோலுரிக்கும் விதமாக எடுக்கப்பட்டிருந்தது. பல்வேறு தடைகளை கடந்து சாதித்த ஜெய் பீம் படத்திற்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்து வருகிறது.
குறிப்பாக அண்மையில் ஆஸ்கர் கமிட்டியின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் ஜெய் பீம் படத்தின் காட்சி இடம்பெற்றது. அந்த யூடியூப் பக்கத்தில் ஒரு தமிழ் படத்தின் காட்சி இடம்பெறுவது இதுவே முதன்முறை. மேலும் 94-வது ஆஸ்கர் விருதுக்காக போட்டியிடும் படங்களின் பட்டியலில் ஜெய் பீம் படமும் இடம்பெற்றிருந்தது. இதனிடையே ஆஸ்கர் விருதுக்காக போட்டியிடும் படங்களின் இறுதிப்பட்டியல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஜெய் பீம் திரைப்படம் எந்த பிரிவிலும் தேர்வாகவில்லை.