இலங்கைக்கு கடத்த முயன்ற ஆம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல்…. இலங்கை சேர்ந்த 3 பேர் உட்பட 6 பேர் கைது…
Author: kavin kumar9 February 2022, 3:54 pm
திருவள்ளூர் : திருவள்ளூர் அருகே சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட ஆம்பெட்டமைன் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுப்பட்ட ஆறு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொல்கத்தா கும்மிடிபூண்டி தேசிய நெடுஞ்சாலையில் ஆம்பெட்டமைன் போதைப்பொருள் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டு வந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்த போது, அதில் ரகசிய அறை அமைத்து ஆம்பெட்டமைன் போதைப்பொருள் கடத்துவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போதை பொருளை பறிமுதல் செய்து, வாகன ஓட்டுனர், உரிமையாளர், இடைத்தரகர் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
அதில் மூன்று பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், கடல் வழியாக இலங்கைக்கு போதை பொருளை கடத்த இருந்தது தெரிய வந்துள்ளது. போதை பொருள் கடத்தல் பின்னணியில் உள்ள, கும்பல் குறித்து துப்பு துலக்க வேண்டி இருப்பதால், கைது செய்யப்பட்டவர்களின் பெயர் உள்ளிட்ட விபரங்களை வெளியிடவில்லை. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் மேலும் தெரிவித்துள்ளனர்.