விசிக-வை எதிர்த்து பிரச்சாரம் செய்தாரா உதயநிதி…? கரூர் பிரச்சாரத்தால் கூட்டணியில் சலசலப்பு

Author: Babu Lakshmanan
9 February 2022, 6:19 pm

கரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட வார்டில் திமுக வேட்பாளரும் போட்டியிடும் நிலையில், அவரை ஆதரித்து எம்எல்ஏ உதயநிதி பிரச்சாரம் செய்தது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கரூர் பேருந்து நிலையம் அருகில் பிரச்சாரம் செய்தார். இந்தக் கூட்டத்திற்காக, பல்வேறு பகுதிகளில் இருந்து சரக்கு ஏற்றிச் செல்லும் வாகனங்களில் கூட பொதுமக்களை திமுகவினர் அழைத்து வந்தனர்.

அப்போது, கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது :- எப்படி சட்டமன்ற தேர்தலில் கரூர் மாவட்டத்தில் 4 பேரை வெற்றி பெறச் செய்தீர்களோ, அதேபோல உள்ளாட்சி தேர்தலில் அனைவரையும் வெற்றி பெற வைக்க வேண்டும். சென்னைக்குப் பிறகு கரூரில் உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தை துவக்கியுள்ளேன். 4000 ரூபாய் நிவாரண நிதி வழங்கி இருக்கிறோம். ஆவின், பெட்ரோல் விலை குறைத்து இருக்கிறோம். மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறோம். நீட் தேர்வை ரத்து செய்யும் வரை ஓய மாட்டோம்.

8 மாத கால ஆட்சியில் பல்வேறு வேலைகள் செய்து இருக்கிறோம். கொரனோ தொற்று பரவல் காலத்தில் தடுப்பூசி செலுத்தியுள்ளோம். பல்வேறு வகையில் உழைத்து இருக்கிறோம். இந்தியாவில் சிறந்த முதல்வராக நம்ம முதல்வரை பத்திரிக்கை தேர்ந்தெடுத்துள்ளது. நம்ம வேட்பாளர்கள் வெற்றி உறுதி செய்யப்பட்டதுதான். கரூர் மாவட்டத்திற்கு மட்டும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் நிகழ்ச்சியில் 51,531 மனு பெறப்பட்டது. இதில், 50722 மனு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. நம் சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கொண்டு சேர்க்க வேண்டும். இந்த வெற்றி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டும். முதல்முறையாக மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு நடைபெறும் தேர்தல், நான் வந்து ஓட்டு கேட்டு இருக்கிறேன். நீங்கள் ஒவ்வொருத்தரும் பொறுப்பு ஏற்று நீங்கள் பிரச்சாரம் செய்ய வேண்டும், எனக் கூறினார்.

கரூர் மாநகராட்சியில் 11 வார்டு திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு, அக்கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜெயராம் என்பவர் போட்டியிடுகிறார். இப்படியிருக்கையில் அதே வார்டில் திமுக வேட்பாளர் பழனி குமார் என்பவரும் போட்டியிட்டுள்ளார். கூட்டணி தர்மத்தை மீறிய செயல் என்று விசிகவினர் திமுகவை வசைபாடி வரும் நிலையில், கரூரில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்திருப்பது பெரும் பேசுபொருளாகியுள்ளது. அதாவது, விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளரை எதிர்த்து திமுக வேட்பாளருக்கு ஆதரவாக அவர் பிரச்சாரம் செய்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது என்று அரசியல் கட்சியினர் கூறுகின்றனர்.

இதனிடையே, பிரச்சாரத்தை முடித்த எம்எல்ஏ உதயநிதி கரூரிலிருந்து குளித்தலை வழியாக திருச்சி சென்றார். இதையொட்டி, லாலாபேட்டை, மகாதானபுரம், கிருஷ்ணராயபுரம், மாயனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே உள்ள காவல்துறை மூலம் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால், பயணிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

உள்ளாட்சித் தேர்தலில் பேருந்துகளில் பயணித்தவர்கள்கூட வாக்காளர்கள் என்பதை திமுகவினர் மறந்து விட்டது போல என்கின்றனர் நடுநிலையாளர்கள்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 1107

    0

    0