பூதாகரமாகும் ஹிஜாப் சர்ச்சை: கர்நாடகாவில் பிப்.16ம் தேதி வரை கல்லூரிகள் மூடல்…11,12ம் வகுப்புகளுக்கும் விடுமுறை..!!

Author: Rajesh
12 February 2022, 8:41 am

பெங்களூரு: கர்நாடகாவில் ஹிஜாப் சர்ச்சையை முன்னிட்டு வருகிற 16ம் தேதி வரை 11, 12ம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.

இதனால், கல்லூரி நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும், கல்லூரி நிர்வாகம் தங்களது உடை விவகாரத்தில் தலையிடுவதாக கர்நாடக உயர் நீதிமன்றத்திலும், தேசிய மனித உரிமை ஆணையத்திலும் அவர்கள் முறையிட்டுள்ளனர்.

ஹிஜாப் போராட்டத்துக்கு எதிராக, சில மாணவர்கள் காவி துண்டு அணியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹிஜாப் அணியும் மாணவிகளை வகுப்புக்குள் அனுமதித்தால் காவி துண்டு அணிந்த எங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கல்லூரிகளில் பதற்றமான சூழல் நிலவியது.
இதனை தொடர்ந்து, கர்நாடகத்தில் 3 தினங்களுக்கு அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என கடந்த 8ம் தேதி அறிவிக்கப்பட்டது. ஹிஜாப் அணிய அனுமதி கோரி முஸ்லிம் மாணவிகள் தொடர்ந்த வழக்கில் இடைக்கால உத்தரவிட மறுத்த உயர்நீதிமன்றம், வழக்கு விசாரணையை தலைமை நீதிபதிக்கு மாற்றி அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஹிஜாப் சர்ச்சையை முன்னிட்டு இன்று முதல் வருகிற 16ம் தேதி வரை 11 மற்றும் 12ம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் ஆகியவற்றை தொடர்ந்து மூடி வைக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. எனினும், திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும். கல்வி நிலையங்கள் ஆன்லைன் வகுப்புகளை நடத்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 1200

    0

    0