ஸ்டாலின் கேட்பது சிறுபிள்ளைத்தனமா இருக்கு… நீட் விவகாரம் பத்தி ஒன்னும் தெரியாம பேசுகிறார் : ஓபிஎஸ் கடும் விமர்சனம்

Author: Babu Lakshmanan
12 February 2022, 2:29 pm

சென்னை : நீட்‌ தேர்வு மற்றும்‌ நுழைவுத்‌ தேர்வு குதித்து உண்மைக்கு மாறான தகவல்களை தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலினை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித்‌ தேர்தலை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில்‌ பல்வேறு இடங்களில்‌ ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல்‌ பரப்புரைக்‌ கூட்டத்தில்‌ காணொலி காட்சி வாயிலாக பேசிய தி.மு.க. தலைவர்‌, கடந்த தி.மு.க. ஆட்சிக்‌ காலத்தில்‌ தமிழ்நாட்டில்‌ எந்தத்‌ தேர்வு மையத்தில்‌ நீட்‌ நடந்ததென்று சொல்ல முடியுமா என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தைப்‌ பார்த்துக்‌ கேட்பது தி.மு.க. தலைவரின்‌ அறியாமையையும்‌, நீட்‌ தேர்வின்‌ வரலாறு தெரியாமல்‌ அவர்‌ பேசுகிறார்‌ என்பதும்‌ கண்கூடாகத்‌ தெரிகிறது.

தி.மு.க. அங்கம்‌ வகித்த மத்திய காங்கிரஸ்‌ ஆட்சிக்‌ காலத்தில்‌, தி.மு.க.வைச்‌ சேர்ந்த திரு. எஸ்‌. காந்திசெல்வன்‌ அவர்கள்‌ மத்திய சுகாதாரம்‌ மற்றும்‌ குடும்ப நலத்‌ துறை இணை அமைச்சராக இருந்தபோது, 27-12-2010 அன்று மருத்துவம்‌ பமிலுவதற்கு நீட்‌ தேர்வு கட்டாயம்‌ என்ற அறிவிக்கை மத்திய அரசிதழில்‌ வெளியிடப்பட்டது. இதனைத்‌ தொடர்ந்து, 2013-2014 ஆம்‌ கல்வி ஆண்டிலிருந்து நீட்‌ தேர்வு மூலம்‌ மருத்துவச்‌ சேர்க்கை நடத்தப்படும்‌ –
என்று 26-04-2012 அறிவிக்கை மூலம்‌ அறிவிக்கப்பட்டது தி.மு.க. மத்திய அரசை தாங்கிப்‌ பிடித்த காலத்தில்தான்‌. அப்படி என்றால்‌ நீட்‌ தேர்விற்கு மூலக்‌ காரணம்‌ யார்‌? தி.மு.க.வும்‌, அப்போதைய மத்திய காங்கிரஸ்‌ அரசும்‌ தான்‌ என்பதில்‌ யாருக்கும்‌ மாறுபட்ட கருத்து கிடையாது. கைப்புண்ணுக்கு எதற்கு கண்ணாடி? எனவே, நீட்‌ தேர்வு வந்ததற்கு தி.மு.க. தான்‌ முழுப்‌ பொறுப்பு. இதற்கான ஆதாரம்‌ வலுவலக இருக்கிறது. எனவே, இதை மூடி
மறைக்க முடியாது. அதே சமயத்தில்‌ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ ஒருபோதும்‌ நுழைவுத்‌ தேர்வையோ அல்லது நீட்‌ தேர்வையோ ஆதரித்தது இல்லை.

2010 ஆம்‌ ஆண்டு இறுதியில்‌ இதற்கான அறிவிக்கையை வெளியிட்ட தி.மு.க. 2011 ஆம்‌ ஆண்டு ஏப்ரல்‌ மாதத்தில்‌ நடைபெற்ற தேர்தலில்‌ தமிழ்நாட்டில்‌ ஆட்சியை பறிகொடுத்தது. அதற்குப்‌ பிறகு 2021-ல்‌ தான்‌ ஆட்சிக்கு வந்திருக்கிறது. பத்தாண்டு காலமாக தி.மு.க. ஆட்சியிலேயே இல்லாத போரது தி.மு.க. ஆட்சிக்‌ காலத்தில்‌ எந்தத்‌ தேர்வு மையத்தில்‌ நீட்‌ தேர்வு நடந்தது என்று கேட்பது சிறுபிள்ளைத்தனமானது. நீட்‌ தேர்வு நடந்ததற்குக்‌ காரணம்‌ தி.மு.க.வும்‌, காங்கிரஸ்‌ கட்சியும்தான்‌. பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும்‌ ஆட்டுவது போல, அன்று நீட்டிற்கு கையெழுத்து போட்டுவிட்டு, இன்று அதற்கு எதிராக நீலிக்‌ கண்ணீர்‌ வடிக்கிறது தி.மு.க.

இன்று இதுகுறித்து பேசும்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌, 2010 ஆம்‌ ஆண்டு இதுகுறித்து ஏதாவது பேசினாரா அல்லது இதுகுறித்து ஏதாவது அவருக்கு தெரியுமா? நீட்‌ தேர்வை அறிமுகப்படுத்திய மத்திய காங்கிரஸ்‌ அரசிலிருந்து தி.மு.க. ஏன்‌ உடனடியாக வெளி வரவில்லை? 2010 ஆம்‌ ஆண்டே தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்தது, கடிதம்‌ எழுதியது என்று கூறும்‌
தி.மு.க. தலைவர்‌, ஏன்‌ மத்திய ஆட்சிக்கு கொடுத்து வந்த ஆதரவை 2013 வரை திரும்பப்‌ பெறவில்லை? அரசே ஒரு விதியை போட்டுவிட்டு அதை அரசே எதிர்ப்பது என்பது விசித்திரமான ஒன்று என்பது தி.மு.க. தலைவருக்கு புரியவில்லையா? இதுதான்‌ தி.மு.க. செய்த மிகப்‌ பெரிய துரோகம்‌, இதற்கெல்லாம்‌ பதில்‌ சொல்ல தி.மு.க. தலைவர்‌ தயாரா? இது குறித்து மேலும்‌ பேசிய தி.மு.க. தலைவர்‌, நீட்‌ தேர்வு செல்லாது என்று தி.மு.க. அரசும்‌ தொடுத்துள்ள வழக்கில்‌ உச்ச நீதிமன்றம்‌ 18-07-2013 அன்று தீர்ப்பளித்து இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார்‌. 18-07-2013 அன்று உச்ச நீதிமன்றம்‌ தீர்ப்பளித்த இந்த வழக்கினை வேலூர்‌ கிறிஸ்துவ மருத்துவக்‌ கல்லூரி மற்றும்‌ இதர மருத்துவக்‌ கல்லூரிகள்‌ தொடுத்தன. மேற்படி தீர்ப்பின்‌ பக்கம்‌ 178-ல்‌ மருத்துவக்‌ கல்லூரிகளை வைத்திருப்பவர்கள்தான்‌ மனுதாரர்கள்‌ என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 203 பக்கங்கள்‌ கொண்ட அந்தத்‌ தீர்ப்பில்‌ தி.மு.க. என்ன வாதத்தை வைத்தது என்பது குறித்து ஒரு வார்த்தை கூட இல்லை.

இன்னும்‌ சொல்லப்‌ போனால்‌ தி.மு.க. என்ற வார்த்தையே அந்தத்‌ தீர்ப்பில்‌ இல்லை. அந்தத்‌ தீர்ப்பில்‌ தி.மு.க. அங்கம்‌ வகித்த மத்திய அரசின்‌ சார்பில்‌ வாதாடிய அரசு வழக்கறிஞர்‌ ‘தேசிய நலன்‌ கருதி நீட்‌ தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது’ என்று கூறி இருப்பது தீர்ப்பின்‌ பக்கம்‌ 133-ல்‌ தெளிவாகக்‌ குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இன்னும்‌ பல இடங்களில்‌ நீட்‌
தேர்விற்கு ஆதரவாக மத்திய அரசு கருத்து தெரிவித்து இருக்கிறது. இதையெல்லாம்‌ தி.மு.க. எதிர்த்ததாகத்‌ தெரியவில்லை. 2011 ஆம்‌ ஆண்டு மே மாதத்திலிருந்து 2021 ஆம்‌ ஆண்டு ஏப்ரல்‌ மாதம்‌ வரை தி.மு.க. ஆட்சியிலேயே இல்லாதபோது, ‘தி.மு.க. அரசும்‌’ என்று தி.மு.க. தலைவர்‌ குறிப்பிட்டு இருப்பது அவரது அறியாமையை காட்டுகிறது.

முதலில்‌ தி.மு.க. வழக்கு தொடுத்தது என்று கூறிவிட்டு, இப்போது தி.மு.க. அரசும்‌ என்று கூறி இருப்பதைப்‌ பார்க்கும்போது, தி.மு.க. நீட்‌ தேர்வு குறித்து வழக்கு தொடுத்ததா என்ற சந்தேகம்‌ மக்கள்‌ மனதில்‌ தற்போது வலுப்‌ பெற்றுள்ளது. எனவே, நீட்‌ தொடர்பாக தி.மு.க. என்ன வழக்கை தொடுத்தது? எங்கே தொடுத்தது? வழக்கு எண்‌ என்ன? தி.மு.க.வின்‌ சார்பில்‌ என்ன , வாதம்‌ வைக்கப்பட்டது? என்பதையெல்லாம்‌ தி.மு.க. தலைவர்‌ நாட்டு
மக்களுக்கு ஆதாரத்துடன்‌ தெரியப்படுத்த வேண்டும்‌ என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பில்‌ வலியுறுத்திக்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌.

அடுத்தபடியாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ நுழைவுத்‌ தேர்வை சட்டப்பூர்வமாக ரத்து செய்தது என்று சட்டமன்றத்தில்‌ நாங்கள்‌ உண்மைக்கு மாறான தகவலை கூறுவதாக தி.மு.க. தலைவர்‌ கூறி இருக்கிறார்‌. உண்மைக்கு மாறான தகவல்‌ அல்ல, உண்மையான தகவல்‌ என்பதை தி.மு.க. தலைவருக்கு ஆதாரத்துடன்‌ முதலில்‌ நான்‌ சுட்டிக்காட்ட விரும்புகிறேன்‌. நுழைவுத்‌ தேர்விற்கு முற்றுப்புள்ளி வைக்கும்‌ வகையில்‌, 2006 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு தொழிற்கல்வி படிப்புகளில்‌ சேர்க்கையை ஒழுங்குமுறைபடுத்துவதற்கான சட்டமுன்வடிவு சட்டமன்றப்‌ பேரவை சட்டமுன்‌ வடிவு எண்‌, 21-01-2006 அன்று தமிழ்நாடு சட்டமன்றப்‌ பேரவையில்‌ அறிமுகப்படுத்தப்பட்டு 27-01-2006 அன்று நிறைவேற்றப்பட்டது. இதனைத்‌ தொடர்ந்து இதற்கான சட்டம்‌ பிப்ரவரி மாதம்‌ 02-02-2006 அரசிதழில்‌ வெளியிடப்பட்டது, இதனைச்‌ செய்து காட்டியவர்‌ மாண்புமிகு இதயதெய்வம்‌
புரட்சித்‌ தலைவி அம்மா அவர்கள்‌.

இதைத்தான்‌ நாங்கள்‌ குறிப்பிட்டுச்‌ சொன்னோமே தவிர, இதில்‌ பொய்யான தகவல்‌ ஏதுமில்லை என்பதைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. இந்தப்‌ பெருமை மாண்புமிகு அம்மா அவர்களுக்கும்‌, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்திற்கும்‌ வந்துவிடக்‌ கூடாது, தி.மு.க. ஆட்சியில்‌ தான்‌ வரவேண்டும்‌ என்பதற்காக அரசியல்‌ காழ்ப்புணர்ச்சியில்‌ சில நடவடிக்கைகளை அப்போது தி.மு.க. மேற்கொண்டதை தமிழ்நாட்டு மக்கள்‌ நன்கு அறிவார்கள்‌. கடந்த தி.மு.க. ஆட்சியின்‌ கடைசி காலத்தில்‌ ஏழை, எளிய, கிராமப்புற மாணவ மாணவியருக்கு, பழங்குடியின, தாழ்த்தப்பட்ட, மிகவும்‌ பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, அரசுப்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவ, மாணவியருக்கு துரோகம்‌ செய்துவிட்டு, இப்போது பொய்ப்‌ பிரச்சாரம்‌ செய்து கொண்டிருக்கும்‌ தி.மு.க. தலைவருக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பில்‌ கடும்‌ கண்டனத்தைத்‌ தெரிவித்துக்‌ கொள்வதோடு, வரலாறு தெரியாமல்‌ மனம்‌ போன போக்கில்‌ பேச வேண்டாமென்று கேட்டுக்‌ கொள்கிறேன்‌, என தெரிவித்துள்ளார்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 987

    0

    0