வாக்கு சேகரிக்க வந்த திமுக எம்பி டிஆர் பாலு : பரப்புரையில் பங்கேற்ற நிர்வாகி திடீர் மரணம்.. பரபரப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan12 February 2022, 2:34 pm
காஞ்சிபுரம் : நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு கலந்துகொண்ட கூட்டத்தில் திமுக தொண்டர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19ம் தேதி நடைபெற உள்ளது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சி முழுவதும் இன்று பிரச்சாரத்தை மேற்கொள்ள வந்த திமுக கழகப் பொருளாளரும் நாடாளுமன்ற குழு தலைவருமான டி ஆர் பாலு கலந்துகொண்டு பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
பிள்ளையார்பாளையம் கிருஷ்ணன் தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடை பெற்ற வேட்பாளர்கள் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த பிள்ளையார் பாளையம் பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகி சந்தானம் (வயது 67) திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மயக்கம் அடைந்தார்.
உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்து இவரை மீட்டு முதலுதவி அளித்து காஞ்சிபுரம் தலைமை அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து சிவகாஞ்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.