சின்னம் ஒதுக்குவதில் ஒருதலைபட்சம்… காங்கிரஸ் போட்டியிடும் வார்டில் திமுக மறைமுக ஆதரவு? அரசியல் கட்சியினர் தர்ணா..!!!

Author: Babu Lakshmanan
12 February 2022, 5:42 pm

கரூர் : கரூரில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் சுயேட்சை வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து, சின்னம் பொருத்தும் பணியில் திமுகவினர் குளறுபடி செய்வதாக அதிமுகவினர் புகார் அளித்துள்ளனர்.

மாநகராட்சி தேர்தல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வார்டு வாரியாக வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி துவங்கி நடைபெற்று வருகின்றது. இதில், 12 வது வார்டு அதிமுக, பாஜக, திமுக தோழமைக் கட்சியான காங்கிரஸ் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் 8 நபர்கள் வேட்பாளராக களமிறங்கி வருகின்றனர்.

இதில் ஆளுங்கட்சிக்கு சாதகமாக கரூர் மாநகராட்சி தேர்தல் அதிகாரிகள் செயல்படுவதாக கூறி, எதிர்கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த வார்டு ஏற்கனவே, திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், சுயேட்சையாக தென்னை மரத்து சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளருக்கு திமுகவினர் ஆதரவு தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, அந்த சுயேட்சை வேட்பாளரின் சின்னத்தை 6வது இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு மாற்றியதால், அதற்கு தேர்தல் அதிகாரிகள் துணை போவதாக கூறி அதிகாரிகளை கண்டித்து அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி மற்றும் மாற்று வேட்பாளருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே 6ம் இடத்தில் இருந்து 5ம் இடத்திற்கு சின்னத்தை மாற்றுவது சட்டத்திற்கு புறம்பான செயல் என்றும், வேண்டுமென்றே அதிமுக வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தினை விடுத்து மற்ற இடத்தில் இடம் ஒதுக்கீடு செய்வதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். காங்கிரஸ் கட்சிக்கு என்று திமுக ஒதுக்கிய வார்டில், சுயேட்சை வேட்பாளரை ஆதரித்து திமுகவினர் இந்த செயலில் ஈடுபடுவதாகக் கூறி கரூர் மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அதிமுகவினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர் முறையிட்டனர்.

மேலும், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் அதிமுக சார்பில் 12-வது வார்டில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழியிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில், முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1018

    0

    0