‘கொன்று புதைத்து விடுவேன்’…அதிமுகவினருக்கு மிரட்டல் விடுக்கும் போலீசார்: கோவை மாவட்ட ஆட்சியரிடம் எஸ்.பி.வேலுமணி புகார்..!!
Author: Rajesh14 February 2022, 12:55 pm
கோவை: கோவை மாநகர போலீசார் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டு அதிமுக தொண்டர்களை மிரட்டி வருவதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
கோவை குனியமுத்தூர் பகுதியில் பொதுமக்களுக்கு தி.மு.க.,வினர் நேற்று ஹாட் பாக்ஸ் உள்ளிட்ட பரிசு பொருட்களை விநியோகம் செய்து வந்தனர். இதனை தொடர்ந்து அதிமுக செய்தி தொடர்பாளர் பேராசிரியர் கல்யாணசுந்தரம் உட்பட அதிமுகவினர் இதனை கண்டித்தனர்.
இந்த சூழலில், கல்யாணசுந்தரம் உட்பட அதிமுகவினர் ஒன்பது பேரை கைது செய்த போலீசார் ராமநாதபுரம் காவல் நிலையத்திற்கு அவர்களை அழைத்து வந்து அமர வைத்தனர். தேர்தல் விதிகளை மீறி பரிசுப் பொருட்களை விநியோகித்தவர்கள் மீது வழக்கு பதியாமல் அதிமுக தொண்டர்கள் மீது போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறி ராமநாதபுரம் காவல் நிலையத்தை எம்.எல்.ஏ.,க்கள் அம்மன் அர்ஜூனன், பி.ஆர்.ஜி.அருண்குமார் மற்றும் கே.ஆர்.ஜெயராம் ஆகியோர் தொண்டர்களுடன் வந்து முற்றுகையிட்டனர்.
இதனிடையே முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உட்பட அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், ” கோவை மாவட்டம் முழுவதும் திமுகவினர் ரவுடிகளை கொண்டு தேர்தல் பணிகளை செய்து வருகின்றனர். சட்டத்திற்குப் புறம்பான வேலைகளை செய்யும் போது அதனை எதிர்த்து கேள்வி கேட்கும் பொது மக்கள் மற்றும் அதிமுகவினரை அச்சுறுத்தி வருகின்றனர்.
நேற்று திமுகவினர் ரவுடிகள் மூலம் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் பண விநியோகத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து புகார் அளித்த பேராசிரியர் கல்யாணசுந்தரம் மீது பொய் வழக்குப் பதிவு செய்ததுடன் அவருடன் 8 அதிமுக தொண்டர்களும் கண்ணியமற்ற முறையில் தரையில் அமர வைத்து தரக்குறைவான வார்த்தையில் பேசி “கொன்று புதைத்து விடுவேன்” என்று போலீசார் மிரட்டியுள்ளனர்.
அமைதிப் பூங்காவாக திகழும் கோவை மாவட்டத்தில் வாழும் பொதுமக்களுக்கும் வாக்காளர்களுக்கும் தற்போது திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் ரவுடிகளின் செயல்பாடுகளால் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க வேண்டிய காவல்துறை திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. இந்த பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு கோவை மாவட்டத்தில் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.