திமுகவின் கிளை கட்சி விடுதலை சிறுத்தைகள்… அதிமுகவை பற்றி பேச திருமா.,வுக்கு எந்த தகுதியும் இல்லை : அதிமுக நிர்வாகி அன்பழகன் கடும் தாக்கு
Author: kavin kumar14 February 2022, 6:29 pm
புதுச்சேரி : திமுகவின் கிளை கட்சியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி செயல்பட்டு வருவதாகவும், அதிமுகவை பற்றி பேச திருமாவளவனுக்கு தகுதியில்லை என புதுச்சேரி அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன், மேற்கு வங்கத்தில் ஆளுநர் இந்திய அரசிலமைப்பு சட்டத்தின் படி சட்டமன்றத்தை முடித்து வைத்ததை சட்டமன்றத்தை முடக்கி வைத்ததாக தெரிவித்த தமிழக முதல்வர் ஸ்டாலின் அம்மாநில ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்தது கண்டிக்க தக்கது என்றும்,
சட்டமன்ற கூட்டத்தொடரை கூட்டவும், முடித்து வைக்கவும் ஆளுநருக்கு உரிமை உள்ளதாகவும்,
தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து ஆளுநர்களை அவமானம் படுத்தும் செயலில் ஈடுபட்டு வருகிறார் இதனால் இந்திய அளவில் தமிழகத்திற்கு அவர் தலைகுணிவை ஏற்படுத்தி உள்ளார். இதற்காக அவர் தமிழக மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் எனவும், தான் அறிவித்த எந்த திட்டத்தையும் செயல்படுத்த முடியாத ஸ்டாலின் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் புதுச்சேரியில் எதிர்கட்சி தலைவராக உள்ளவர், தனது எதிர்கட்சி பணியை சரியாக செய்ய வேண்டும். புதுச்சேரியில் அரசு அறிவித்த திட்டங்களை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு செயல்படுத்தியுள்ளதாகவும், தெரிவித்தார். மேலும் அதிமுகவின் எடப்பாடி பாஜகவின் செய்திதொடர்பாளர் போல் செயல்படுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறிய கேள்விக்கு பதில் அளித்த அன்பழகன், திமுகவிற்கு கிளை கட்சியை திருமாவளவன் நடத்தி வருவதாகவும், அவருக்கு அதிமுகவை பற்றி பேச தகுதியில்லை என்றும் தெரிவித்தார்.