பிப்.,17 தேதி மாலை 6 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யக் கூடாது : தேர்தல் ஆணையம் உத்தரவு
Author: Babu Lakshmanan14 February 2022, 7:48 pm
சென்னை : வரும் 17ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடக்கூடாது என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி, அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. கொரோனா தொற்று அச்சுறுத்தல் இருப்பதால், ஏற்கனவே அரசியல் கட்சிகளின் பிரச்சாரத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், வாக்குப்பதிவு 19ம் தேதி நடைபெற உள்ளதால் வரும் 17ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் பிரச்சாரங்களுக்கு அனுமதி இல்லை என தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அனுப்பிய அறிக்கையில் கூறியிருப்பதாவது : – தேர்தல் நடத்தை விதிகளின்படி அரசியல் கட்சிகளின் தேர்தல் பொதுக்கூட்டங்கள் மற்றும் ஏனைய பிரச்சாரங்கள் அனைத்தையும் வாக்குப்பதிவு முடிவுறும் நேரத்திலிருந்து 48மணி நேரத்திற்கு முன்பாக கண்டிப்பாக நிறுத்தப்பட வேண்டும்.
அதன்படி, தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் ஏனைய பிரச்சாரங்கள் அனைத்தையும் 17.02.2022 (வியாழக்கிழமை) அன்று மாலை 6.00 மணிக்கு மேல் மேற்கொள்ளக்கூடாது என்பதை அரசியல் கட்சியினர், வேட்பாளர் கடைபிடிப்பதை உறுதி செய்ய அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.