திமுகவிடம் காங்கிரஸை அடகு வைத்த கேஎஸ் அழகிரி…? தமிழகத்தில் ராகுல் காந்தி போட்டியா..?
Author: Babu Lakshmanan15 February 2022, 5:19 pm
தமிழகத்தில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தலைவர் கே. எஸ்.அழகிரி அவ்வப்போது சர்ச்சையை கிளப்புவது போல் ஏதாவது பேசி வம்பில் மாட்டிக் கொள்வது வழக்கம்.
ஹிட்லர் போல மோடி
வரும் 19-ம் தேதி தமிழகத்தில் நடக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி சென்னையில் பிரச்சாரம் செய்தபோது, அழகிரி இதுபோல் பேசிய ஒரு பேச்சுதான் தற்போது ஒரு சுவாரஸ்யமான விவாதப் பொருளாக மாறி இருக்கிறது.
அண்மையில் மேற்கு வங்க ஆளுநர் அந்த மாநிலத்தின் சட்டப்பேரவை கூட்டத் தொடரை முடக்கி வைப்பதாக அறிவித்தார். அதை சுட்டிக்காட்டி பேசிய கே. எஸ். அழகிரி,”மேற்கு வங்கத்தில் ஆளுநர் சட்டப் பேரவையை முடக்கி வைத்திருப்பது சட்டத்திற்கு புறம்பானது. மோடி தன்னை ஹிட்லராக பாவிக்கிறார். ஹிட்லரைபோல செயல்படலாம் என்றும் நினைக்கிறார். ஆனால் ஹிட்லராக மாறுவது என்பது சிரமம். ஏனென்றால் இது ஒரு ஜனநாயக நாடாகும்.
மேற்கு வங்கத்தில் நடந்திருப்பதை இந்திய மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எப்போதுமே ஜனநாயகத்துக்கு புறம்பான நிகழ்வுகள் எல்லாமே தோற்கடிக்கப்பட்டுத்தான் இருக்கின்றன.
மேற்குவங்கத்தை போல தமிழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையை ஆளுநர் எடுத்தாலும் இந்தியாவில் இருக்கிற காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சிகள் அதனை கடுமையாக எதிர்ப்போம். சட்டத்திற்கு புறம்பாக எதையும் செய்துவிட முடியாது.
தெளிவில்லாத பேச்சு
மேற்கு வங்கத்தில் செய்திருப்பது ஒரு சோதனை. அதில் அவர்கள் தோல்வி அடைவார்கள். சட்டப் பேரவையை முடக்கி வைக்கலாம். ஆனால் மாநில அரசின் ஒப்புதலோடு அதை செய்யவேண்டும். எனவே அதில் அவர்கள் தவறு செய்திருக்கிறார்கள். அந்த தவறுக்கு அவர்களே தங்கள் விரலை சுட்டுக் கொள்வார்கள் என்பதை ஞாபகப்படுத்துகிறேன்
2024 நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்திற்கு சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெறும். அப்போது நம்மால் ஆட்சியை கைப்பற்ற முடியும் என்று அதிமுக தலைவர்கள் பேசி வருகின்றனர். இது கேலிக்கூத்தான விஷயம்.
தமிழகம் போன்ற ஒரு மாநிலத்தில் இதைச் செய்து விடமுடியாது. பாஜக ஆட்சி செய்யும் 13 மாநிலங்களில் வேண்டுமானால் கொண்டு வரலாமே தவிர எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் யாரும் இதை அனுமதிக்க மாட்டார்கள். எனவே அத்தைக்கு மீசை முளைத்தால் இது நடக்கலாம்” என்று கொந்தளித்து பேசி இருக்கிறார்.
உண்மையிலேயே மேற்கு வங்க விவகாரம் குறித்து கே எஸ் அழகிரி தெரிந்துதான் பேசுகிறாரா? தெரியாமல் பேசுகிறாரா? என்பது புரியவில்லை. கடந்த வாரம் தொடங்குவதாக இருந்த அந்த மாநிலத்தின் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரை ஆளுநர் ஜகதீப் தங்கர் அடுத்த மாதத்துக்கு ஒத்தி வைப்பதாக திடீரென அறிவித்தார்.
ஏற்கனவே அந்த மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும், ஆளுநருக்கும் இடையே கடும் மோதல் போக்கு இருப்பதால் அதனடிப்படையில் ஜகதீப் தங்கர் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்ததாக தேசிய அளவில் செய்தி வேகமாக பரவியது. மேற்கு வங்கத்திலும் இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
கண்டனமும்… பதிலும்…
இதைத்தொடர்ந்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவை கூட்டத்தை ஒத்திவைத்த மேற்குவங்க ஆளுநரின் செயல் மரபுகளுக்கு எதிரானது என்று ட்விட்டரில் வெளிப்படையாக விமர்சித்தார்.
வேறு எந்த மாநில முதலமைச்சரும் கண்டனம் தெரிவிக்காத நிலையில் தமிழக முதலமைச்சர், மேற்குவங்க ஆளுநருக்கு எதிராக கருத்து தெரிவித்தது, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஆளுநர் ஜகதீப் தங்கர் ட்விட்டர் பக்கத்தில் உடனடியாக தனது
மறுப்பை பதிவு செய்தார். அதில்,” தமிழக முதலமைச்சரின் கடுமையான வேதனைக்குரிய கருத்துகள் சிறிதளவும் உண்மையின் அடிப்படையில் இல்லை. மாநில அரசின் பரிந்துரைப்படி தான் சட்டப்பேரவையை ஒத்தி வைத்தேன்” என்று குறிப்பிட்டு இருந்ததோடு மேற்கு வங்க அரசிடம் இருந்து வந்த கடித விவரத்தையும் அத்துடன் இணைத்திருந்தார்.
இதனால் அப்பிரச்சினை, அத்துடன் முடிவுக்கு வந்தது.
தாமதமான விளக்கம்
இதுபற்றிய செய்தி அனைத்து செய்தி சேனல்களிலும், இணைய ஊடகங்களிலும் பிரேக்கிங் நியூஸ் ஆகவும் வெளியானது.
ஆனால் 48 மணி நேரம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துவிட்டு திடீரென கண் விழித்தவர் போல கே. எஸ். அழகிரி மேற்கு வங்க ஆளுநரின் நடவடிக்கைக்கு மிகத் தாமதமாக கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
அதுமட்டுமின்றி நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் கருத்தும் சொல்கிறார் என்று அரசியல் ஆர்வலர்கள் அழகிரியை கலாய்க்கிறார்கள்.
ஒதுக்கும் மம்தா
இதுபற்றி அவர்கள் கூறும்போது, “1975-ம் ஆண்டு நாட்டில் நெருக்கடி நிலையை அறிவித்தபோது அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, ஹிட்லராக மாறிவிட்டார் என்று விமர்சனங்கள் எழுந்தன. ஒரு வார இதழ் இந்திராகாந்தியின் முகம் ஹிட்லர் போல மாறுவதாக கார்ட்டூன் வெளியிட்டதை தற்போதைய தமிழக காங்கிரஸ் தலைவராக இருக்கும் கே எஸ் அழகிரி எப்படி மறந்தார் என்று தெரியவில்லை.
அதுமட்டுமல்ல மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஒரு பேட்டியில், மதச்சார்பின்மையில் நம்பிக்கை கொண்ட அனைவரும் ஒரே குடையின் கீழ் வருவது அவர்களது கடமை. அதற்காக கைகோர்க்க வருமாறு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு அழைப்பும் விடுத்தேன்.
அந்தக் கட்சிகள் கண்டு கொள்ளாவிட்டால் நான் செய்வதற்கு ஒன்றுமில்லை. காங்கிரஸ் அதன் வழியில் போகட்டும். நாங்கள் எங்கள் வழியில் செல்கிறோம். காங்கிரசுடன் எந்த மாநில கட்சியும் சுமூகமான உறவு கொண்டிருக்கவில்லை” என்று வசை பாடி இருக்கிறார்.
இப்படி வெளிப்படையாக காங்கிரசை விமர்சிக்கும் மம்தா பானர்ஜியின் மேற்குவங்க அரசுக்குத்தான் தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறார். முதலில் அன்றாட அரசியலில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொண்டு அதற்கு தகுந்தாற்போல் அவர் பேசப் பழகவேண்டும்.
கரூர் நாடாளுமன்ற எம்பி ஜோதிமணி இன்னும் ஒருபடி மேலே சென்று பாஜகவுடன் அதிமுகவை இணைத்து விடுங்கள் என்று கேலியாக குறிப்பிட்டு இருக்கிறார்.
தமிழகத்தில் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தேர்தலின்போதும் திமுக ஒதுக்கும் குறைந்தபட்ச தொகுதிகளை வேறுவழியின்றி வாங்கிக்கொண்டு காங்கிரஸ் போட்டியிடுகிறது. இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 3 சதவீத இடங்களை கூட காங்கிரசுக்கு திமுக ஒதுக்கவில்லை.
கரூர் மாவட்டத்தில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் ஜோதிமணி மோதி பார்த்தும் கூட காங்கிரஸுக்கு எதிர்பார்த்த அளவிற்கு வார்டுகள் அந்த மாவட்டத்தில் கிடைக்கவில்லை. அப்படி இருந்தும் 30-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் திமுக கூட்டணியில்தான் காங்கிரஸ் போட்டியிடுகிறது.
அதனால் தமிழகத்தில் செல்வாக்கை வேகமாக இழந்து வரும் காங்கிரசை திமுகவுடன் இணைத்து விட்டால் நன்றாக இருக்கும் என்று யாராவது சொன்னால், அதை காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளுமா? அதுபோல்தான் ஜோதிமணி கூறுவதும் இருக்கிறது. தமிழகத்தில் பாஜக தனித்துப் போட்டியிடுகிறது. ஆனால் அந்தத் துணிச்சலும், தைரியமும் காங்கிரசுக்கு இல்லாமல் போய்விட்டது.
ராகுலுக்காக அடித்தளமா..?
2024 நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரபிரதேசத்திலோ, மார்க்சிஸ்ட் ஆட்சி செய்யும் கேரளாவிலோ ராகுல் காந்தியால் மீண்டும் போட்டியிட முடியாது. அங்கு தோல்வி கண்டு விடுவோமோ என்ற பயம் அவருக்கு உள்ளது.
அதனால்தான் தமிழகத்தில் போட்டியிட ராகுல் தொகுதி கேட்கலாம் என்ற அடிப்படையில் இங்கே திமுக சொல்வதையெல்லாம் காங்கிரஸ் ஏற்றுக் கொள்கிறது, தலையை ஆட்டுகிறது என்று கூட கருதுவதற்கும் இடம் உள்ளது.
அதைவிட மிக முக்கியமாக தமிழக காங்கிரஸ் ரொம்பவும் பலவீனமாக இருக்கிறது என்பதை திமுக தலைமை நன்கு உணர்ந்தும் உள்ளது.
அதனால் திமுகவை எதிர்த்து, காங்கிரசால் தனித்துக் களம் இறங்க முடியாது. அக்கட்சி கொடுக்கிற இடங்களை வாங்கிக் கொண்டுதான் ஆக வேண்டும். வேறு வழியில்லை” என்று அந்த அரசியல் ஆர்வலர்கள் கிண்டலாக குறிப்பிட்டனர்.