ஆஞ்சநேயர் பிறந்த இடம் என கூறி திருப்பதி மலையில் கோவில் கட்ட பூமி பூஜை : உயர்நீதிமன்றம் தடை விதித்ததால் பரபரப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan16 February 2022, 11:26 am
திருப்பதி: திருப்பதி மலையில் ஆஞ்சநேயர் பிறந்த இடம் என்று கூறப்படும் பகுதியில் அவருக்கு கோவில் கட்ட பூமி பூஜை நடந்த நிலையில் கோவில் கட்ட ஆந்திர உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
திருப்பதி மலையில் உள்ள ஆகாசகங்கை சமீபத்தில் ஆஞ்சநேயருக்கு கோவில் கட்ட தேவஸ்தான நிர்வாகம் இன்று பூமிபூஜை நடத்தியது. இந்த நிலையில் கர்னூலை சேர்ந்த மூன்று பேர் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட ஆந்திர உயர்நீதிமன்றம் பதில் மனு தாக்கல் செய்ய திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி மற்றும் ஆந்திர மாநில அறநிலையத்துறை வருவாய் முதன்மை செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
திருப்பதி மலையில் உள்ள ஏழு மலைகளில் அஞ்சனாத்திரி மலையில் இருக்கும் ஆகாசகங்கை அருகே ஆஞ்சநேயர் அவருடைய தாயார் அஞ்சனா தேவிக்கு பிறந்தார் என்று தேவஸ்தானம் கூறுகிறது.
ஸ்கந்த புராணம், பிரம்மாண்ட புராணம், பிரம்ம புராணம்,பத்ம புராணம், பவிஷ்யோத்ர புராணம், வாமன புராணம், வராக புராணம் ஆகியவற்றில் ஆஞ்சநேயர் திருமலையில் உள்ள அஞ்சனாற்றி பகுதியில்தான் பிறந்தார் என்று கூறப்பட்டுள்ளது என்று தேவஸ்தானம் தெரிவிக்கிறது.
இது தவிர வெங்கடாச்சலம் மஹாத்மியம் என்ற நூலிலும் திருமலையில் உள்ள ஆகாசகங்கை பகுதியில் ஆஞ்சநேயர் பிறந்தார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நூல் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ராமானுஜர் ஆல் அங்கீகரிக்கப்பட்ட நூலாகும்.
ஆஞ்சநேயர் வேறு பகுதியில் பிறந்ததற்கு இது போன்ற புராண ஆதாரங்கள் எங்கும் கிடையாது என்று கூறும் தேவஸ்தான நிர்வாகம், 2020ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் திருப்பதி மலையில் உள்ள அஞ்சனாத்திரி பகுதியில் ஆஞ்சநேயர் பிறந்தார் என்று அறிவிக்க வேண்டும் என்று கோரி தேவஸ்தான நிர்வாகத்திற்கு இமெயில்களை அனுப்பி வந்தனர்.
எனவே ஆஞ்சநேயர் பிறந்த இடம் குறித்து ஆய்வு செய்வதற்காக தேவஸ்தானம் பண்டிதர் குழு ஒன்றை அமைத்தது. அந்த குழு நீண்ட ஆய்விற்கு பின் புராணங்களில் கிடைத்த ஆதாரங்கள் மற்றும் ஆஞ்சநேயர் திருப்பதி மலையில் தான் பிறந்தார் என்பதற்கு புவியியல் நிதி ஆதாரங்கள் மற்றும் கல்வெட்டுக்களில் காணப்படும் தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் திருப்பதி மலையில் உள்ள அஞ்சனாத்திரி பகுதியில்தான் ஆஞ்சநேயர் பிறந்தார் என்று உறுதிபடுத்தியது.
இந்த உறுதியான தகவல்கள் அடிப்படையில் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி ஸ்ரீராமநவமி தினம் என்று திருப்பதி மலையில் உள்ள அஞ்சனாத்திரி பகுதியில் ஆஞ்சநேயர் பிறந்தார் என்று தேவஸ்தானம் அறிவித்தது .
இந்த நிலையில் ஆஞ்சநேயர் பிறந்த இடத்தில் அவருக்கு கோவில் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் கட்டுமான செலவு சுமார் 40 கோடி ரூபாயையும் நன்கொடையாளர்கள் இரண்டுபேர் ஏற்க முன்வந்துள்ளனர்.
எனவே அங்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இன்று காலை 9 மணி அளவில் விசாகா சாரதா பீடாதிபதி சொரூபானந்தேந்திரா தலைமையில் பூமி பூஜை நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தேவஸ்தான அறங்காவலர் குழுவினர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் கிஷ்கிந்தாவில் உள்ள பம்பா சேத்திரம் பீடாதிபதி கோவிந்தானந்த சரஸ்வதி சுவாமி கிஷ்கிந்தாவில் சுமார் 1200 கோடி ரூபாயில் ஆஞ்சநேயருக்கு கோவில் கட்ட தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அடிப்படை மற்றும் அதில் இடம் பெற்றுள்ள கிஷ்கிந்தாகாண்டம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆஞ்சநேயர் கிஷ்கிந்தா பகுதியிலுள்ள அஞ்சனாத்திரி மலையில் பிறந்தார் என்று பீடாதிபதி கோவிந்தானந்த சரஸ்வதி சுவாமி கூறுகிறார்.
எனவே திருப்பதி மலையில் ஆஞ்சநேயருக்கு கோவில் கட்டும் தேவஸ்தான முயற்சி விவாத பொருளாகிறது. இந்த நிலையில் கர்னூலை சேர்ந்த 3 பேர் திருப்பதி மலையில் ஆஞ்சநேயருக்கு கோவில் கட்டும் தேவஸ்தானத்தின் முயற்சியை நிறுத்த கோரி ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வழக்கு கொடுத்திருந்தனர்.
வழக்கை விசாரணைக்கு ஏற்று கொண்ட நீதிமன்றம் ஆகாச கங்கை பகுதிகளில் ஆஞ்சநேயருக்கு கோவில் கட்டும் முயற்சிக்கு நேற்று இடைக்காலத் தடை விதித்தது.
மேலும் இதுதொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய தேவஸ்தான நிர்வாக அதிகாரி,ஆந்திர மாநிலம் அறநிலையத்துறையின் வருவாய் முதன்மை செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் ஆஞ்சநேயருக்கு கோவில் கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தில் எவ்விதமான கட்டுமானங்களையும் மேற்கொள்ளக்கூடாது என்றும் அந்த இடத்தில் கட்டுமானம் தவிர மற்ற பணிகளில் ஈடுபட தடை கிடையாது என்றும் ஆந்திர உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் தேவஸ்தான நிர்வாகம் இன்று ஆஞ்சநேயருக்கு கோவில் கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தில் பூமி பூஜை நடத்தியது.