‘ஜூஸ் குடிச்சது ஒரு குத்தமா’…ஆன்லைன் விசாரணையில் குளிர்பானம் அருந்திய போலீஸ்: நீதிபதி கொடுத்த வேற லெவல் Punishment..!!
Author: Rajesh16 February 2022, 1:56 pm
ஆமதாபாத்: குஜராத் உயர்நீதிமன்ற ஆன்லைன் விசாரணையின் போது குளிர்பானம் அருந்திய காவலருக்கு, 100 குளிர்பானங்களை பார் அசோசியேஷனுக்கு விநியோகிக்க வேண்டும் என தலைமை நீதிபதி உத்தரவிட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
குஜராத்தில் சாலையில் இரு பெண்களை இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர்கள் தாக்கியதாக கூறப்படும் வழக்கு அம்மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அரவிந்த் குமார் விசாரணைக்கு வந்தது. ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரியிருந்தனர்.
இம்மனு மீதான விசாரணையில் ஆன்லைன் மூலமாக ஆஜராகியிருந்தார் இன்ஸ்பெக்டர் ரத்தோட். விசாரணையின் போது அவர் குளிர்பானம் அருந்தியதை தலைமை நீதிபதி பார்த்துள்ளார். சில நாட்களுக்கு முன் இதே போல் ஒரு வழக்கறிஞர் விசாரணையின் போது சமோசா சாப்பிட்டதை பார்த்து அனைவருக்கும் பகிரும் படி நீதிபதி சொன்னார்.
இந்நிலையில் இன்ஸ்பெக்டர் குளிர்பானம் குடித்ததற்கு அதே போல் நீதிபதி கண்டனம் தெரிவித்தார். மேலும், ‘நீங்கள் சாப்பிடுவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இதையே தான் சமோசா சாப்பிட்டவரிடமும் சொன்னோம். எங்கள் முன்னே நீங்கள் சாப்பிடக் கூடாது. ஏனென்றால் மற்றவர்களும் ஆசைப்படுவார்கள்.
அதனால், அனைவருக்கும் கொடுக்க வேண்டும் அல்லது சாப்பிடக்கூடாது என்று கூறிய நீதிபதி, 100 குளிர்பானங்களை வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு வழங்கவும் இல்லையெனில் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட வேண்டும் என உத்தரவிட்ட சம்பவம் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.