அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு: குற்றவாளிகள் 38 பேருக்கு தூக்கு…11 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை..!!
Author: Rajesh18 February 2022, 12:32 pm
அகமதாபாத்: அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் 38 பேருக்கு தூக்கு தண்டனையும், 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
குஜராத் மாநிலத்தின் அகமாதாபாத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடர் வெடி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. யாரும் எதிர்பாராத வகையில் அடுத்தடுத்து 21 இடங்களில் வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன.
இந்த தொடர் தாக்குதலில் 56 பேர் கொல்லப்பட்டனர். 240 பேர் படுகாயம் அடைந்தனர். வணிக வளாகங்கள் மற்றும் மக்கள் நடமாடும் பகுதிகளில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் 77 பேர் குற்றவாளிகளாக குற்றம் சாட்டப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை அகமதாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றம்சாட்டப்பட்ட 77 பேரில் 49 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். 26 பேர் விடுதலை செய்யப்பட்டனர். குற்றவாளிகள் 49 பேரில் 38 பேருக்கு தூக்கு தண்டனை விதித்தும், எஞ்சிய 11 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்தும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.