ஓட்டுக்கு பணம் கொடுத்த திமுகவினர்… கைது செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏ : மதுரையில் பரபரப்பு
Author: Babu Lakshmanan18 February 2022, 12:39 pm
மதுரை : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த திமுகவினரை கைது செய்ய வலியுத்தி அதிமுகவினர் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற இருக்கிறது. இதற்கான பிரச்சாரம் நேற்றோடு நிறைவடைந்தது. தேர்தல் விதிகளை மீறியும், வாக்காளர்களுக்கு ரொக்கம் உள்ளிட்ட பரிசு பொருட்களை அரசியல் கட்சியினர் விநியோகித்து வருகின்றனர்.
குறிப்பாக, பரிசுப் பொருட்களை வழங்கும் திமுகவினரை எதிர்கட்சிகளான அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சித் தொண்டர்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்து வருகின்றனர்.
அந்த வகையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பங்களா மேடு பகுதியில், பூத் சிலிப்புடன் திமுகவினர் வாக்காளர்களை சந்தித்து, ஓட்டுக்கு ரூ.1,000 வழங்கி வந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த அதிமுகவினர் சம்பவ இடத்திற்கு போலீசுடன் சென்றுள்ளனர். இதைக் கண்ட திமுகவினர் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
இதைத் தொடர்ந்து, திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எம்எல்ஏ அய்யப்பன் தலைமையிலான அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, போலீசார் திமுகவினருக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், ஓட்டுக்கு பணம் கொடுத்த திமுக வேட்பாளர்களை கைது செய்ய வேண்டியும் அவர்கள் வலியுறுத்தினர். அப்போது, அங்கு வந்த போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக கலைய முயன்றனர். அப்போது, அவர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து அதிமுகவினர் கலைந்து சென்றனர்.