கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரியில் சீல் வைக்கப்பட்ட வாக்கு இயந்திரங்கள் : பாதுகாப்பு பணியில் 3 அடுக்கு போலீசார்!!
Author: Udayachandran RadhaKrishnan20 February 2022, 10:17 am
கோவை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்போடு அனுப்பி வைக்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில் மொத்தம் 2303 மையங்களில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில் இருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்போடு தடாகம் சாலையில் உள்ள ஜிசிடி கல்லூரி வளாகத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது.
வாக்கு எண்ணிக்கை மையத்தில் இயந்திரங்கள் பத்திரமாக முகவர்கள் முன்னிலையில் அடுக்கி வைக்கப்பட்டது. கோவை மாவட்ட சிறப்பு தேர்தல் பார்வையாளர் நாகராஜன், தேர்தல் பார்வையாளர் கோவிந்தராவ், மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்காரா ஆகியோர் வாக்கு எண்ணிக்கை மையத்தை நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்டு, வாக்கு எண்ணிக்கை மையங்களை அரசியல்கட்சி, சுயட்சை உள்ளிட்ட முகவர்கள் முன்னிலையில் சீல் வைத்தனர்.
இதேபோல் மதுக்கரை தொண்டாமுத்தூர் மேட்டுப்பாளையம் பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்போடு வைக்கப்பட்டது.