களைகட்டிய ஒகேனக்கல் : சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து உற்சாகம்
Author: kavin kumar20 February 2022, 2:24 pm
தருமபுரி : ஒகேனக்கல்லில் விடுமுறை தினத்தை கொண்டாட சுற்றுலா பயணிகள் குவிந்ததால், பரிசல் ஓட்டிகள் உள்ளிட்ட சிறு சிறு தொழிலாளர்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தின் சிறந்த சுற்றுலா தளமாக விளங்குவது தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் சுற்றலா தளம். இங்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். கொரோனோ வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த தடை கடந்த சில தினங்களுக்கு முன்பு விலக்கி கொள்ளபட்டதையடுத்து ஒகேனக்கல் சுற்றுலா தளத்தை காண சுற்றுலா பயணிகள் வர துவங்கி உள்ளனர். இந்தநிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதாலும், ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க வந்த பொது மக்கள் இன்று ஒகேனக்கலில் உள்ள இயற்கை அழகை காணவும், அங்குள்ள நீர்வீழ்ச்சிகளில் குளித்து மகிழவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்திருந்தனர்.
மேலும் அங்கு பரிசல் சவாரி செய்தும், மணல்திட்டு, ஐவர் பாணி உள்ளிட்ட பகுதிகளில் பரிசலில் சென்று இயற்கை அழகை ரசித்து மகிழ்ந்ததோடு அங்கு ஆயில் மசாஜ் செய்து அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் மிகவும் பிரசித்தி பெற்ற மீன் சமையலை ருசித்து மகிழ்ந்தனர். கடந்த சில ஆண்டுகளாக வருமானமின்றி தவித்த வியாபாரிகள் தற்போதைய சுற்றுலா பயணிகளின் வருகையால் மகிழ்சியடைந்துள்ளனர்.