கடைசி போட்டியிலும் அபார வெற்றி..! வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரை ஒயிட் வாஷ் செய்த இந்தியா…

Author: kavin kumar
20 February 2022, 11:21 pm

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றது. இதில் தொடக்க ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 8 ரன் வித்தியாசத்திலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை கைப்பற்றியதுடன் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இந்த நிலையில் இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி, இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் களமிறங்கினர்.

ருதுராஜ் கெய்வாட் 4 ரன்களில் அவுட்டாகி கிடைத்த வாய்ப்பை வீணடித்தார். இஷான் கிஷன் 34 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து களமிறங்கிய ஸ்ரேயஸ் அய்யர் (25), நடுவரிசையில் இறங்கிய கேப்டன் ரோகித் 7) ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதையடுத்து சூரியகுமார் யாதவும், வெங்கடேஷ் அய்யரும் இணைந்து அதிரடியுடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். குறிப்பாக சூரியகுமார் யாதவ் 7 சிக்சர்களுடன் 65 ரன்கள் குவித்தார். வெங்கடேஷ் 35 ரன்கள் எடுத்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில் டொமினிக் டிரேக்ஸ், ஹேடன் வால்ஷ், ரோஸ்டன் சேஸ், ரொமாரியோ மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகியொர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

இதையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி துவக்கத்தில் இருந்தே தடுமாறியது. துவக்க வீரர்கள் மேயர்ஸ் (6), ஹோப் (8) ஆகியோர் விரைவில் வெளியேறிய நிலையில், அதிரடியாக ஆடிய ரோமன் பாவெல் 25 ரன்களில் வெளியேறினார். அதன்பிறகும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. 100 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டை இழந்தது வெஸ்ட் இண்டீஸ்.இந்த நெருக்கடியான தருணத்திலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிகோலஸ் பூரன் அரை சதம் கடந்து நம்பிக்கை அளித்தார். தொடர்ந்து ஆடிய அவர் 61 ரன்களில் அவுட் ஆனார். ரொமாரியோ ஷெப்பர்டு 29 ரன்களிலும், டிரேக்ஸ் 4 ரன்களிலும் ஆட்டமிழக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களே எடுத்தது.

இதனால் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்தியா தரப்பில் ஹர்ஷல் பட்டேல் 3 விக்கெட் வீழ்த்தினார். தீபக் சாகர், வெங்கடேஷ் அய்யர், ஷர்துல் தாகூர் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர். இந்த வெற்றியின்மூலம் 3 போட்டி கொண்ட டி20 தொடரை இந்தியா 3-0 என முழுமையாக கைப்பற்றியது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 2002

    0

    0