நாளை வெளியாகிறது தேர்தல் முடிவுகள் : பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வாக்கு எண்ணும் மையத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு!!
Author: Udayachandran RadhaKrishnan21 February 2022, 12:08 pm
கோவை : கோவையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தில் மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இந்தத் தேர்தலுக்கான, வாக்குப்பதிவு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது.
கோவை மாவட்டத்தில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை பூட்டி சீல் வைக்கப்பட்டு, கண்காணிப்பு கேமரா மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே வாக்கு எண்ணும் மையத்தில் மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
பாதுகாப்பு ஏற்பாடுகள், கண்காணிப்பு கேமரா செயல்பாடுகள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடுவோர் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி துணை ஆணையர் ஷர்மிளா உடனிருந்தார்.