நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வெற்றி சான்றிதழில் தேர்தல் ஆணையம் வைத்த செக்…! அதிர்ச்சியில் கோவை மாநகராட்சி கவுன்சிலர்கள்..!
Author: Babu Lakshmanan22 February 2022, 6:22 pm
பலமுனை போட்டி
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இவற்றில் மொத்தம் 12,820 வார்டுகள் உள்ளன. ஏற்கனவே இதில் 218 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டும் விட்டனர். எஞ்சிய வார்டு உறுப்பினர் பதவிகளை பிடிக்க 57,746 பேர் போட்டியிட்டனர்.
திமுக, அதிமுக, பாஜக, மநீம, தேமுதிக, நாம் தமிழர் கட்சி, அமமுக, பாமக என அரசியல் கட்சிகள் தங்களின் பலத்தை நிரூபிக்க களமிறங்கியதால் பலமுனைப் போட்டி நிலவியது.
நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களும் அரசியல் கட்சிகளுக்கு இணையாக களமிறங்கி இந்த தேர்தலில் ஒரு கலக்கு கலக்கினர்.
கடந்த சட்டப் பேரவை தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக கூட்டணி தோல்வி கண்டதால் அண்ணா அறிவாலயம் கடும் அதிர்ச்சி அடைந்தது. இதனால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளையும் குறிவைத்து திமுக தலைமை வேட்பாளர்களை களமிறக்கியது.
பரிசு பொருட்கள்
கோவை மாநகராட்சியைக் முழுமையாக கைப்பற்றும் நோக்கத்தில்
முதலமைச்சர் ஸ்டாலின் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அத்தனை பொறுப்புகளையும் ஒப்படைத்தார்.
அதிமுகவை பொறுத்தவரை கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில்
கோவை மாவட்டத்தில் அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றி கண்டதற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் கடுமையான உழைப்புதான் காரணம் என்பதால் அவர் வசமே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பொறுப்பும் கொடுக்கப்பட்டது.
தற்போது அதிமுக எதிர்க்கட்சி என்ற நிலையிலும் வேலுமணி தினமும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதிமுக வேட்பாளர்களுடன் வீடு வீடாக சென்று வாக்கும் சேகரித்தார்.
இரு கட்சியினரும் கோவை மாநகராட்சியை கைப்பற்றுவதை கவுரவ பிரச்சனையாக கருதி கடுமையாக உழைத்தனர். அமைச்சர் செந்தில் பாலாஜி கரூர் மாவட்டத்தில் இருந்தும், சென்னை நகரில் இருந்தும் ஏராளமான திமுகவினரை வரவழைத்து பிரச்சாரம் செய்ய வைத்தார்.
கடைசி நேரத்தில் பெண் வாக்காளர்களுக்கு வெள்ளிக்கொலுசு, விலைஉயர்ந்த சேலை, ஸ்மார்ட் போன், ஹாட் பாக்ஸ், மிக்ஸி வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. மேலும் வாக்காளர்களுக்கு சிறப்பு கவனிப்பாக பணப்பட்டுவாடாவும் இருந்ததாக குற்றச்சாட்டும் எழுந்தது.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இந்த நிலையில்தான் தமிழகத்தின் இரண்டு பெரிய அரசியல் கட்சிகளும் கோவை வாக்காளர்களை தீவிர உபசரிப்பில் ஈடுபடுத்துவதை கண்டு கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் சென்னை ஐகோர்ட்டில் அவசர வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், “வாக்காளர்களுக்கு இரு பெரிய கட்சிகளுமே பணம், சேலை உள்ளிட்ட பரிசு பொருட்களை வாரி வழங்கின. எனவே இந்த தேர்தல் முறைகேடு தொடர்பாக ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு ஒன்றை அமைத்து விசாரிக்கவேண்டும் என்று கோவை தேர்தல் அதிகாரியிடம் கடந்த 19-ம் தேதி மனு கொடுத்தேன். ஆனால் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதில் யார் வெற்றி பெற்றாலும் பணம் கொடுத்து முறைகேடாகத்தான் புனிதமான பதவியில் அமர்வார்கள். அதனால் கோவை மாநகராட்சிக்கு நடந்த தேர்தலை அடியோடு ரத்து செய்யவேண்டும். தவிர வாக்குகளை எண்ணி முடிவுகளை வெளியிடவும் தடை விதிக்கவேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
சான்றிதழில் ‘செக்’
இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், கோவை மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு தடை இல்லை என்று உத்தரவிட்டது. அதேநேரம் தேர்தல் முடிவுகள் ஐகோர்ட்டின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்றும் கூறி, பணப்பட்டுவாடா தொடர்பான வழக்கில் மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தியும் வைத்தது.
இதனால் தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது கோவை மாநகராட்சியில் பதிவான ஓட்டுகளும் எண்ணி அறிவிக்கப்பட்டன. வெற்றிபெற்ற கவுன்சிலர்களுக்கு அதற்கான சான்றிதழும் உடனடியாக வழங்கப்பட்டது.
ஆனால் தேர்தல் அதிகாரிகள் வழங்கிய அந்த சான்றிதழை வெற்றியாளர்கள் முழுமையாகப் படித்துப் பார்த்தபோது ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்துதான் போனார்கள்.
அதற்கு முக்கிய காரணம் அந்த சான்றிதழில் வெற்றி பெற்ற வேட்பாளர் பெயர், அவர் எந்த வார்டை சேர்ந்தவர் என்பது உள்ளிட்ட பல விவரங்களுடன், தேர்தல் முடிவுகள் சென்னை ஐகோர்ட்டின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்றும் சான்றிதழின் கீழ்ப்பகுதியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனால் வெற்றி பெற்ற கவுன்சிலர்களில் பலர், மனப்புழுக்கம் அடைந்துள்ளனர். இந்த வழக்கில் ஐகோர்ட்டின் இறுதித் தீர்ப்பு எப்போது வரும், அது நமக்கு சாதகமாக அமையாவிட்டால் என்ன செய்வது? என்பது போன்ற குழப்பமும் அவர்களிடம் ஏற்பட்டுள்ளது. இதை தங்கள் கட்சியின் தலைமைக்கும் போன் மூலம்
தொடர்பு கொண்டு அந்தக் கவுன்சிலர்கள் ஆழ்ந்த கவலையுடன் வெளிப்படுத்தியும் இருக்கின்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு திக் கிக்
இதுபற்றி அரசியல் சட்ட வல்லுநர்கள் சிலர் கூறும்போது,”சென்னை ஐகோர்ட் இந்த வழக்கை மிகச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது தெரிகிறது. வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்து விட்டநிலையில் கோவை மாநகராட்சிக்கு மீண்டும் தேர்தல் நடத்த உத்தரவிட்டால் அது பொருத்தமானதாக இருக்காது என்று ஐகோர்ட் நீதிபதிகள் அமர்வு கருதி ஓட்டு எண்ணிக்கைக்கு தடை விதிக்கவில்லை என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.
அதையொட்டிதான் கோவை மாநகராட்சி தேர்தல் முடிவுகள் இறுதி தீர்ப்பிற்கு கட்டுப்பட்டது என்று நீதிபதிகள் குறிப்பிட்டிருக்கின்றனர். இந்த வழக்கு இன்னும் இரண்டு வாரம் கழித்து விசாரணைக்கு வரும்போது மாநிலத் தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகள் சார்பில் வாக்காளர்களுக்கு பரிசுப்பொருள் பணப்பட்டுவாடா எதுவும் செய்யப்படவில்லை என்பதை விரிவாக எடுத்துக் கூறவேண்டிய கடும் நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. அதேநேரம் மனுதாரர் சார்பில் தகுந்த வீடியோ ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டால் சென்னை ஐகோர்ட்டு இப்பிரச்சனையை மிகத் தீவிரமாக எடுத்துக் கொள்ளவும் வாய்ப்பு உண்டு. விசாரணையும் நீண்டு கொண்டே போகலாம்.
இதைக் கருத்தில் கொண்டுதான் மாநிலத் தேர்தல் ஆணையம் கோவை மாநகராட்சி கவன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கிய சான்றிதழில் தேர்தல் முடிவு சென்னை ஐகோர்ட்டின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்ற நிபந்தனையையும் சேர்த்து இருக்கிறது.
மற்ற 20 மாநகராட்சிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழில் இதுபோன்ற நிபந்தனை எதுவும் கூறப்படாத நிலையில் கோவை மாநகராட்சியில் வென்றவர்களுக்கு மட்டும் இத்தகைய குறிப்புடன் சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பது சற்று பதைபதைப்பை ஏற்படுத்தத்தான் செய்யும்.
அதேநேரம் மாநிலத்தேர்தல் ஆணையம், மிகவும் முன்ஜாக்கிரதையாக ஐகோர்ட் தீர்ப்பு பற்றிய விளக்கத்தையும் தனது சான்றிதழில் அளித்துள்ளது.
இந்த விவரத்தை மாநில தேர்தல் ஆணையம் வெற்றி சான்றிதழில் தெரிவிக்காமல் போயிருந்தால் நாளை அதுவும்கூட ஒரு பிரச்சினைக்குரிய விஷயமாகி உருவாகி இருக்கும்.
இந்த வழக்கு முடிந்து தீர்ப்பு வெளியாகும் வரை கோவை மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அனைவருக்குமே மனதுக்குள் ஒரு ‘திக் திக்’ இருந்து கொண்டேதான் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்று அவர்கள் குறிப்பிட்டனர்.