தமிழகத்தில் பாஜக வரலாறு காணாத வளர்ச்சியை கண்டுள்ளது.. அதே சமயம் அதிமுக மீண்டு வரும் : அண்ணாமலை!!

Author: Udayachandran RadhaKrishnan
22 February 2022, 7:07 pm

தமிழகத்தில் இதுவரை வெல்லாத இடங்களிலும் பாஜக வெற்றி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பெருவிதம் கொண்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் கடந்த 19-ஆம் தேதி, 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றதை தொடர்ந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இதில் பெரும்பான்மையான இடங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தங்களது வெற்றியை பதிவு செய்து வரும் நிலையில், இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில் திமுக பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

அதாவது, தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் 21-லும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் முன்னிலை வகிக்கிறது. அதிமுக ஒரு மாநகராட்சியை கூட பிடிக்கவில்லை. அதிமுக கோட்டையான கோவை, தேனி, நெல்லை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களை திமுக கைப்பற்றியது.

அதாவது, மாநகராட்சிகளில் 849 வார்டுகளையும், நகராட்சிகளில் 2348 வார்டுகளையும், பேரூராட்சிகளில் 4388 வார்டுகளையும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வென்றுள்ளது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அதிமுகவை பொறுத்தளவில், இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் 154 வார்டுகளையும், நகராட்சிகளில் 636 வார்டுகளையும், பேரூராட்சிகளில் 1206 வார்டுகளையும் அதிமுக வென்றுள்ளது. இன்னும் முடிவுகள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து பேசிய பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வரலாறு காணாத வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றி பிரதமர் மோடி மீது தமிழக மக்கள் வைத்துள்ள அன்பை காட்டுகிறது. பிரதமர் மோடி மீதான அன்பால், தமிழகத்தில் இதுவரை வெல்லாத இடங்களிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தோல்வியில் இருந்து அதிமுக மீண்டு வரும் என்றும் கருத்து தெரிவித்தார். இதனிடையே, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சிகளில் 18 வார்டுகள், நகராட்சிகளில் 56 வார்டுகள், பேரூராட்சிகளில் 230 வார்டுகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Actor Sri Caught By Families இன்ஸ்டாகிராமில் நிர்வாண வீடியோ… முதல்முறையாக மகிழ்ச்சியை பகிர்ந்த நடிகர் ஸ்ரீ!