நதிநீர் பிரச்சனைக்கு தீர்வுக்கான தென் மாநில முதல்வர்கள் மாநாடு அமைக்க வேண்டும்: முதல்வருக்கு தமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்கம் கோரிக்கை…
Author: kavin kumar23 February 2022, 3:53 pm
திருச்சி : நதிநீர் பிரச்சனைக்கு தீர்வுக்கான தென் மாநில முதல்வர்களின் மாநாட்டை அமைக்க வேண்டும் என முதல்வருக்கு தமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்கத்தின் மாநில நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு தமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் குருசாமி தலைமை தாங்கினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஒருங்கிணைப்பாளர் குருசாமி பேசியதாவது:- தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கோதாவரி காவிரி இணைப்பு திட்ட மாநாடு வருகிற பிப்ரவரி மாதம் 26 மற்றும் 27ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தாமிரபரணி, வைப்பாறு, வைகை, காவிரி, தென்பெண்ணை, பாலாறு ஆற்றுப்படுகை மக்கள் மன்ற பிரதிநிதிகள், விவசாய சங்கங்கள், இந்திய ஆற்றின் நீர் நிர்வாக பிரதிநிதிகள் ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்துகொள்கின்றனர்.
இந்த மாநாட்டில் கோதாவரி காவிரி திட்டத்தில் தமிழகத்தின் நீர் தேவையை தெலுங்கானா மாநிலத்தின் மக்களிடத்தும், அம்மாநில அரசியல் கட்சிகளிடத்தும், வலிமையாக எடுத்துரைத்திட தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்வது மிக மிக அவசியமானதாகும். எனவே அரசியல் கட்சிகள் தங்களது கட்சியின் பிரதிநிதியை இந்த மாநாட்டுக்கு அனுப்பி வைத்திடக் கோரியும், தெலுங்கானா ஆந்திரா கர்நாடகம் தமிழகம் ஆகிய தென்மாநில அரசுகள் அடங்கிய முதல்வர்களின் மாநாட்டை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்படுத்தி நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்கத்தின் மாநில நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் விவசாய சங்க நிர்வாகிகள் ஆத்தூர் சங்கரையா, வயலூர் ராஜேந்திரன் புதுக்கோட்டை ராஜசேகர் லால்குடி வீரசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.