எங்கு பார்த்தாலும் குண்டு வெடிக்கும் சப்தம்… இந்தியர்களை எப்பாடுபட்டாவது மீட்டெடுங்கள் : மத்திய அரசுக்கு சீமான் வலியுறுத்தல்
Author: Babu Lakshmanan24 February 2022, 4:06 pm
சென்னை : போர் தொடங்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டில் சிக்கித்தவிக்கும் தமிழ்நாட்டு மாணவர்களையும், பொதுமக்களையும் சிறப்பு விமானம் மூலம் பாதுகாப்பாக மீட்டுக்கொண்டுவர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- உக்ரைன் மீது ரசியா போர்த்தாக்குதல்களைத் தொடங்கியுள்ள நிலையில், அங்குத் தங்கி படித்து வரும் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் சிக்கித் தவித்து வருவது மிகுந்த வேதனையளிக்கிறது.
போர்த் தொடங்குவதற்கு முன்பே தங்கள் குழந்தைகளை மீட்க வேண்டிப் பெற்றோர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், மாணவச் செல்வங்களைப் பாதுகாப்பாக மீட்டுக்கொண்டுவராததுடன், மாணவர்களின் நிலைகுறித்து உரியப் பதிலும் அளிக்காது, மெத்தனமாகச் செயல்படும் இந்தியத் தூதரகத்தின் அலட்சியப்போக்கும், இந்திய ஒன்றிய அரசின் பாராமுகமும் வன்மையான கண்டனத்திற்குரியது.
தாங்கள் ஈன்றெடுத்து வளர்த்த அன்பு பிள்ளைகள் சொந்த நாட்டில் உயர்கல்வி படிக்கும் வாய்ப்போ, வசதியோ கைவரப் பெறாத நிலையிலேயே கல்வி உதவித்தொகை மூலம் அயல்நாடு அனுப்பிப் படிக்க வைக்கின்றனர். தற்போது அவர்களது உயிர் பாதுகாப்பே கேள்விக்குறியாகியுள்ள நிலையில் மாணவர்களின் பெற்றோர்களும், குடும்பத்தினரும் மன அமைதி இழந்து தவித்துவருகின்றனர்.
போர்ச்சூழலால் உக்ரைன் நாட்டு அரசு தனது வான்பரப்பு சேவைகளை முடக்கியுள்ளதால், இன்று இந்திய மத்திய அரசால் அனுப்பப்பட்ட விமானம் திருப்பி அனுப்பப்பட்டதையடுத்து உக்ரைன் நாட்டிலிருந்து இந்தியாவைச் சேர்ந்த மாணவர்களும், பொதுமக்களும் வெளியேற முடியாமல் தவித்துவருகின்றனர்.
ஆகவே, இந்திய அரசு நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள மாணவர்கள் மற்றும் பொதுமக்களை வெளியேற ஏதுவாகச் சிறப்பு அனுமதி பெற்று,தமது சொந்த செலவில் சிறப்பு விமானம் மூலம் தாயகம் மீட்டு அழைத்துவர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். தமிழ்நாடு அரசு, இந்திய வெளியுறவுத்துறை மற்றும் உக்ரைன் நாட்டிற்கான இந்தியத் தூதரகத்தை உடனடியாகத் தொடர்புகொண்டு விரைவாக தமிழ்நாட்டு மாணவர்களும், பொதுமக்களும் மீட்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென்றும் நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.