உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க நேட்டோ மட்டும் காரணமல்ல… யாரும் அறிந்திடாத முக்கிய காரணம் தெரியுமா..? (வீடியோ)

Author: Babu Lakshmanan
26 February 2022, 1:25 pm

சோவியத் கூட்டமைப்பு கலைப்பு

சரியாக 31 ஆண்டுகளுக்கு முன்பு சோவியத் ரஷ்ய கூட்டமைப்பு 1991-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ந் தேதி கலைக்கப்பட்டது. இதனால் 1922-ம் ஆண்டு முதலே அந்தக் கூட்டமைப்பில் அங்கம் வகித்து வந்த ரஷ்யா, உக்ரைன், பெலாரஸ், கஜகஸ்தான் உள்ளிட்ட 14 நாடுகள் தனி நாடுகளாக தங்களை அறிவித்துக் கொண்டன.

மிக அருகருகே இருந்த காரணத்தால் ரஷ்யாவும், உக்ரைனும் நெருங்கிய மொழி, கலாச்சாரம், நட்புறவு கொண்ட நாடுகளாகவே முதலில் இருந்தன. ஆனால் 2000க்கு பின்பு எலியும், பூனையும் போல் ஆகிவிட்டன. 2014-ல் உக்ரைனின் கிரிமியா தீபகற்ப பகுதியை அதிரடியாக கைப்பற்றி ரஷ்யா தன்னுடன் இணைத்துக்கொண்டது.

நேட்டோவில் சேர முயற்சி

இந்த நிலையில்தான் 1949-ல் சோவியத் ரஷ்யா மற்றும் ஜெர்மனிக்கு எதிராக உருவாக்கப்பட்ட ‘நேட்டோ’ கூட்டமைப்பில் இணைவதற்கு உக்ரைன் ஆர்வம் காட்டியது.
எந்தவொரு நாட்டின் மீது அந்நியப் படையெடுப்பு நிகழ்ந்தாலும், மற்ற நாடுகள் நேட்டோ படைகளை அனுப்பி சம்பந்தப்பட்டவர்களுக்கு உதவி செய்யும். இதில் தற்போது 30 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

4 கோடியே 40 லட்சம் மக்கள் தொகை கொண்ட சிறிய நாடான உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைந்துவிட்டால் அது தனக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்று ரஷ்யா கருதியது. அதனால் நேட்டோ அமைப்பில் அதனை சேர்க்கக் கூடாது என்று ரஷ்ய அதிபர் புதின் வெளிப்படையாக கடந்த சில மாதங்களாக வலியுறுத்தியும் வந்தார்.

ஆனால் நேட்டோ அமைப்பில் உள்ள அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரனை விட்டுக்கொடுக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்தன.

ரஷ்யா கோபம்

இந்த நிலையில்தான் கடந்த இரண்டு மாதங்களாக உக்ரைன் எல்லையோரப் பகுதிகளில் சுமார் 2 லட்சம் ராணுவ வீரர்களை ரஷ்யா குவித்து விட்டு போர் தொடுக்க மாட்டோம் என்று சொன்னது.

ஆனாலும் கடந்த 23-ம் தேதி வான்வழி மற்றும் தரைவழி தாக்குதலை தொடங்கிவிட்டது. உக்ரைன் தலைநகர் கீவ் பகுதிக்குள் பறந்து ரஷ்ய போர் விமானங்கள் குண்டு வீசியும் வருகின்றன.

கிவ், கார்கிவ், டினிப்ரோ நகரங்களில் உள்ள ராணுவ நிலைகள், விமான தளங்கள் ராணுவ கிடங்குகள் மீது ஏவுகணை தாக்குதலையும் ரஷ்யா நடத்தியுள்ளது. உக்ரைன் ராணுவமும் எதிர்த் தாக்குதல் நடத்தி வருகிறது.

இரு நாடுகளுக்கும் இடையேயான இந்தப் போரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களும் பொதுமக்களில் 100க்கு அதிகமானவர்களும் பலியாகி இருப்பதாக பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவிலிருந்து உக்ரைனுக்கு உயர்கல்வி பயிலவும் வேலைதேடியும்
சென்ற 18 ஆயிரம் மாணவ மாணவிகளின் உயிர் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது.

அவர்களை ருமேனியா, ஹங்கேரி நாடுகளின் எல்லைகள் வழியாக விமானம் மூலம் இந்தியாவுக்கு மீட்டு வர மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டும் வருகிறது.

பிற நாடுகளுக்கு எச்சரிக்கை

திடீரென இப்படி போர் பிரகடனம் செய்ததற்கு அதிபர் புதின் சொன்ன காரணம் “உக்ரைன் நாட்டின் டான்பாஸ் பகுதி மக்களின் உரிமைகளை பாதுகாக்க இந்த நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறேன்” என்பதாகும்.

ஆனால், தான் உலக நாடுகளிடம் அளித்த வாக்குறுதிப்படி புதின் நடந்து கொள்ளாதது மட்டுமின்றி “இந்தப் போரில் எந்த நாடாவது தலையிட நினைத்தால் அந்த நாடு இதுவரை வரலாற்றில் சந்திக்காத மோசமான விளைவுகளை அடைய நேரிடும்” என்று எச்சரிக்கையும் விடுத்தார்.

Viladimir_Putin_UpdateNews360

இந்த பதற்றமான சூழலில் “சண்டையை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக” ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரவ் கூறியிருக்கிறார்.

இதையடுத்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யாவுடன் பேச்சு நடத்த தயாராக உள்ளோம். புதின் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆனால் புதினோ உக்ரைன் ராணுவம் தனது நாட்டின் அதிபரை பதவியில் இருந்து உடனே நீக்கவேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். முதலில் உக்ரைனுக்கு ஆதரவாக நின்ற நேட்டோ நாடுகள், தற்போது மௌனம் காத்து வருவதால் ரஷ்யாவின் தாக்குதல் உக்கிரமடைந்து இருக்கிறது.

கொரோனா தொற்று பரவலால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பொருளாதார ரீதியாக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. இதை மனதில் கொண்டுதான் நேட்டோ நாடுகள், ரஷ்யாவின் மீது பொருளாதாரத் தடைகளை மட்டும் விதித்துள்ளன. இதுவரை உக்ரைனுக்கு
ராணுவ ரீதியாக எந்த உதவியும் செய்யவில்லை.

போருக்கு முக்கிய காரணம்?

உக்ரைன் மீது கடும் போரை தொடங்கியதற்கு ரஷ்யா பல்வேறு காரணங்களை கூறினாலும் கூட இதன் பின்னணியில் வேறு சில முக்கிய காரணங்களும் இருப்பதாக ராணுவ ஆய்வு வல்லுநர்கள் கருதுகின்றனர்.

“எந்த ஒரு நாடும் இன்னொரு அண்டை நாட்டின் மீது அவ்வளவு எளிதாக போர் பிரகடனம் செய்து விடாது. ஒரு நாடு பல்வேறு துறைகளில் அடைந்துள்ள ஒட்டுமொத்த வளர்ச்சியை வெளிப்படையாக அறிந்து கொள்ளும் போதுதான் அந்த நாட்டை கைப்பற்ற வேண்டும் என்கிற எண்ணம் இன்னொரு நாட்டுக்கு உருவாகும். அதுவும் ஒரு வல்லரசு நாடே பக்கத்து நாட்டின்மீது போர் தொடுக்கிறது என்றால் அதன் பின்னணியில் ஆயிரம் விஷயங்கள் நிச்சயம் இருக்கும்.

குறிப்பாக உக்ரைன் நாட்டில் இல்லாத வளங்களே இல்லை என்று சொல்லவேண்டும் அந்த அளவிற்கு வளங்கள் நிறைந்த ஒரு நாடாக அது உள்ளது. அந்த நாடு கனிம, இயற்கை வளத்தின் மூலம் குவிக்கும் வருவாய் கண்களை உறுத்தும்.

அந்த வகையில் யுரேனியம் உற்பத்தியில் ஐரோப்பா கண்டத்திலேயே உக்ரைன் முதல் இடத்தில் உள்ளது. டைட்டானியம் வளத்தில் ஐரோப்பாவில் 2-வது இடம், உலகில் 10-வது இடம். இரும்புத் தாது, மாங்கனீஷ் உற்பத்தியில் உலகளவில் 2-வது இடம். இதேபோல் மெர்க்குரி தயாரிப்பிலும் ஐரோப்பிய நாடுகளில் 2வது இடம். அமோனியா உற்பத்தியில் ஐரோப்பாவில் முதலிடம். நிலக்கரி உற்பத்தியில் ஐரோப்பாவில் 7வது இடம்.

இயற்கை வளங்கள் நிறைந்த நாடுகள் வரிசையில் உலகளவில் 4-வது இடத்திலும் இருக்கிறது. குறிப்பாக மொத்த விவசாய விளை நில பயன்பாட்டில் முதலிடம்.
கருப்பு மண்ணை அதிகம் கொண்ட உலகின் 3-வது நாடு.

அதிக அணுமின் நிலையங்கள் அமைந்துள்ள ஐரோப்பிய நாடுகளில் உக்ரைனுக்கு மூன்றாவது இடம். நியூக்ளியர் டர்பன்களை தயாரிப்பதில் உலக நாடுகள் பட்டியலில் நான்காவது இடத்திலும் அது உள்ளது. இதேபோல் ராக்கெட் லாஞ்சர்கள், விண்வெளி ஆராய்ச்சி சாதனங்கள், ஏவுகணைகள் தயாரிப்பில் சர்வதேச அளவில் 4-வது இடம். குறிப்பிடத்தக்க அளவிற்கு இயற்கை எரிவாயுவும், தங்கமும் உற்பத்தி செய்கிறது.

உக்ரைனில் இருந்து ஏராளமான பூக்கள், பழங்கள் மற்றும் சமையல் எண்ணெய், பார்லி, கோதுமை போன்ற பொருட்கள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உக்ரைன் நாட்டின் மூலம் சுமார் 60 கோடி மக்களின் அன்றாட உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும்.

முன்னேற்றத்தால் பொறாமை

உக்ரைன் பெரும்பாலும் ரஷ்யாவைப் போலவே தன்னிறைவு பெற்ற பொருளாதாரமாகும். அதாவது யாரையும் சார்ந்திடாத நாடு. அதேநேரம் உக்ரைன் இயற்கை வளங்களில் ரஷ்யாவை விடவும் மிகப்பெரிய நாடாக திகழ்கிறது. ஆண்டுதோறும் சுமார் 4 லட்சம் கோடி ரூபாய்க்கு பொருட்களை ஏற்றுமதியும் செய்கிறது.

இதுபோல் உக்ரைன் பெருமைகள் பற்றி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். இப்படி எல்லா வகையிலும் கடந்த 30 ஆண்டுகளில் ரஷ்யாவை விட உக்ரைன் பல மடங்கு முன்னேற்றம் கண்டுள்ளது.

முன்பு தன்னுடன் இருந்த ஒரு நாடு இப்படி தன்னை மிஞ்சும் அளவிற்கு வளர்ந்துவிட்டதே என்ற நினைப்பு கூட புதினுக்கு ஏற்பட்டிருக்கலாம். இதுதான் அவருடைய போர் நடவடிக்கைக்கு முக்கிய காரணமாக இருக்கும். உக்ரனை கைப்பற்றுவது அவருடைய நோக்கமாக இருக்காது என்றாலும் கூட அந்த நாட்டை ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது எதிர்காலத்துக்கு உதவும் என்பது புதினின் கணக்காக இருக்கும்.

putin-updatenews360

இதை அவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிந்தித்து வந்திருக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே உக்ரைன் மீதான போர் என்பது நன்கு திட்டமிட்ட ஒன்றாகத்தான் தெரிகிறது.

அதனால்தான் அவர் இப்படி திடுதிப்பென்று போரைத் தொடங்கிவிட்டார். தன்னிடம் இதுபற்றி யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்கிற தைரியமும் புதினிடம் வந்துள்ளது. மூன்றாம் உலகப் போர் தொடங்கிட இது வழிவகுக்கும் என்று கூறப்படுவதையும் பொருட்படுத்தாமல் புதின் இப்படி உக்ரைன் மீது போர் கொடுத்திருக்கிறார் என்று கருதுவதற்கும் இடமுள்ளது” என்று ராணுவ ஆய்வு வல்லுநர்கள் குறிப்பிட்டனர்.

  • Vijay Deverakonda and Rashmika Mandanna relationship ராஷ்மிகா போட்ட கண்டிஷன்..திருமணத்தை உதறிய விஜய் தேவரகொண்டா..!
  • Views: - 2269

    0

    0