கார் ஏசியில் திடீர் கோளாறு : சாலையில் வந்த கார் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்!!

Author: Udayachandran RadhaKrishnan
27 February 2022, 10:30 am

திண்டுக்கல் : வேடசந்தூர் அருகே வடமதுரையில் ஏசி கோளாறு காரணமாக திண்டுக்கல் திருச்சி தேசிய நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியை சேர்ந்தவர்கள் கதிரேசன் மற்றும் கணேசன். கணேசன் கோவையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இன்று வேலை விசயமாக கணேசன் ஒரு காரில் சென்னை சென்று கொண்டிருந்தார்.

காரை கதிரேசன் ஓட்டி வந்துள்ளார். அப்போது நள்ளிரவில் வடமதுரை அருகே வந்தபோது திடீரென காரின் முன்பக்க பகுதியில் புகை வந்துள்ளது. இதனை அடுத்து திண்டுக்கல் திருச்சி தேசிய நான்கு வழிச்சாலையில் சாலையோரம் காரை நிறுத்த பார்த்தபோது திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதைக்கண்ட கதிரேசன் மற்றும் கணேசன் அங்கிருந்து தப்பி ஓடினார். சிறியதாக பற்றிய தீ மளமளவென கார் முழுவதும் பற்றி எரிய தொடங்கியது.

இதனையடுத்து வேடசந்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் அதற்கு முன்னதாகவே கார் முழுவதும் எரிந்து சாம்பலாகியது.

காரில் இருந்து புகை வருவதை அறிந்து கொண்ட கதிரேசன் சாலையின் ஓரமாக காரை நிறுத்தியதால் அதிர்ஷ்டவசமாக காரில் பயணித்த கதிரேசன் மற்றும் கணேசன் ஆகியோர் உயிர் தப்பினர். இந்த சம்பவம் குறித்து வடமதுரை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Attakathi Dinesh latest news கெத்து காட்டும் அட்டகத்தி தினேஷ்…கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்தி அசத்தல்…!