‘விட்டு வர மனமில்லை…எந்நேரமும் குண்டு சத்தம்’: உக்ரைனில் இருந்து இந்தியா வந்த செல்லப்பிராணிகள்..!!(வீடியோ)
Author: Rajesh3 March 2022, 5:56 pm
டெல்லி: உக்ரைனில் இருந்து வரும் இந்தியர்கள் தங்களுடன் நாய், பூனை ஆகிய வளர்ப்பு பிராணிகளை கொண்டுவர தடையில்லை என ஒன்றிய அரசு அறிவித்ததை அடுத்து, இந்தியர்களுடன் செல்லப்பிராணிகளும் வந்து சேர்ந்தன.
உக்ரைனில் படித்து வரும் ரிஷப் கவுஷிக் என்ற இந்திய மாணவர், தான் வளர்த்து வரும் நாயை விட்டு அங்கிருந்து வெளியேற மறுத்துவிட்டார். மேலும் நாயுடன் இந்தியா வர உதவிடுமாறு சமூக வலைத்தளங்களில் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இதையடுத்து ஒன்றிய மீன்வளம், கால்நடைகள் மற்றும் பால் வளத்துறை அமைச்சகத்தில் பிராணிகள் நல அமைப்பான பீட்டா முறையிட்டது. இதனை தொடர்ந்து உக்ரைனில் இருந்து வரும் இந்தியர்கள் தங்களுடன் நாய், பூனை ஆகிய வளர்ப்பு பிராணிகளையும் கொண்டு வரும் வகையில் விதிகளை ஒன்றிய அரசு தளர்த்தியது.
இதையடுத்து உக்ரைனில் இருந்து தாயகம் வருபவர்கள் தங்கள் செல்லப் பிராணிகளையும் உடன் அழைத்து வருகின்றனர். இந்திய விமானப்படை விமானம் மூலம் நேற்று தாயகம் வந்த மாணவர்கள் தங்கள் செல்ல நாய்களுடன் விமான நிலையத்திலிருந்து வெளியே வரும் காட்சியை விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
மேலும், காசியாபாத் வந்த விமானத்தில் ஷாகித் என்ற மாணவர் நாயையும், கௌதம் என்ற மாணவர் பூனையையும் அழைத்து வந்தனர்.