கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவுக்கு நிரந்தர பூட்டு? வன உயிரினங்களை கணக்கெடுக்கும் பணிகளில் அதிகாரிகள் தீவிரம்!!
Author: Udayachandran RadhaKrishnan5 March 2022, 5:24 pm
கோவை : கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவின் அங்கீகாரத்தை மத்திய வன உயிரின ஆணையம் ரத்து செய்துள்ள நிலையில் வ.உ.சி பூங்காவில் உள்ள பறவைகள், பாம்புகள் உள்ளிட்ட உயிரினங்கள் குறித்து வனத்துறையினர் அன்மையில் கணக்கெடுப்பு நடத்தினர்.
இதனை அடுத்து உயிரினங்களுக்கு உடல்நிலை பரிசோதனை விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
கோவை மாநகர் மக்களின் முக்கிய பொழுதுபோக்கும் இடமாக வ.உ.சி. உயிரியல் பூங்கா விளங்குகிறது. ஆரம்பத்தில் இந்த பூங்காவில் சிங்கம், புலி, கரடி, மான்கள், குரங்குகள், பாம்புகள், பல்வேறு வகையான பறவைகள் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த வன விலங்குகளை நாள்தோறும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் கண்டு ரசித்து வந்தனர். இந்த பூங்காவில் மத்திய வன உயிரின ஆணைய அதிகாரிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆய்வு செய்தனர்.
அப்போது இந்த பூங்காவில் மிக சிறிய இடத்தில் பராமரிக்கப்பட்டு வந்த சிங்கம், புலி, கரடி உள்ளிட்ட ஆபத்தான விலங்குகளை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு இடமாற்றம் செய்ய உத்தரவிட்டனர். இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் அந்த விலங்குகள் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டது.
மேலும் கோவை வ.உ.சி. பூங்காவை விரிவாக்கம் செய்து வன விலங்குகள், அதற்குரிய சூழலில் வசிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வன உயிரின ஆணைய அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.
இதையடுத்து கோவை மாநகராட்சி அதிகாரிகள் வ.உ.சி. பூங்காவை விரிவாக்கம் செய்வதற்கான திட்ட அறிக்கை தயார் செய்தனர். ஆனால் ஆண்டுகள் கடந்த போதும் விரிவாக்க பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. இதையடுத்து வன உயிரின ஆணைய அதிகாரிகள் வ.உ.சி. பூங்காவின் அங்கீகாரத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
இந்நிலையில் வ.உ.சி. பூங்காவில் உள்ள பாம்புகள், பறவைகள், மான்கள், குரங்குகள் உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகளின் எண்ணிக்கை குறித்து அன்மையில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 635 உயிரினங்கள் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து விரைவில் உயிரினங்களுக்கு உடல்நிலை குறித்து பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘ வ.உ.சி பூங்காவில் உள்ள உயிரினங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டதை தொடர்ந்து உடல்நிலை பரிசோதனை விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது,’’ என்றனர்