மீண்டும் கிளம்பிய ‘ஜெய்பீம்’ சர்ச்சை…’எதற்கும் துணிந்தவன்’ படத்தை வெளியிட எதிர்ப்பு: தியேட்டர் உரிமையாளர் சங்கத்திற்கு கடிதம் அனுப்பிய பாமக!!
Author: Rajesh8 March 2022, 8:57 am
ஜெய்பீம் படத்தில் இடம்பெற்ற வன்னியர்களுக்கு எதிரான காட்சிகளுக்கு சூர்யா பொது மன்னிப்பு கேட்கும் வரை கடலூரில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை திரையிடக் கூடாது என தியேட்டர் உரிமையாளர் சங்கத்தினருக்கு பாமக சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தும் வகையிலான காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறி அந்த படம் வெளியான போது பாமகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடத்தினர்.
ஜெய்பீம் படத்திற்கு தடை கேட்டும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இருப்பினும், பல எதிர்ப்புக்களை கடந்து ஜெய்பீம் பலரிடமும் பாராட்டை பெற்றது. இந்நிலையில் ஜெய்பீம் படத்தை தொடர்ந்து சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் மார்ச் 10 ம் தேதி தியேட்டர்களில் ரிலீசாக உள்ள நிலையில், மீண்டும் ஜெய்பீம் சர்ச்சை கிளம்பியுள்ளது.
பாமக மாணவர் சங்க மாநில செயலாளர் இள.விஜயவர்மன் சார்பாக கடலூர் மாவட்ட தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், திரைப்பட நடிகர் சூர்யா நடித்து கடந்த 2021 நவம்பர் 02ம் தேதியில் வெளியான ஜெய்பீம் திரைப்படம். டி.செ.ஞானவேல் இயக்கிய இப்படத்தை 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்து நடிகர் சூர்யா நடித்துள்ளார்.
இருளர் சமுதாய மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டுள்ள உண்மை சம்பவ அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம். சாதி வெறியர்களாக காட்டினர் அதில் வழக்கறிஞர் சந்துரு அதே பெயரில் இருக்க கதாபாத்திரத்தில் வந்த அனைவரும் அதே கதாபாத்திரத்தில் நடிக்க எஸ்ஐ அந்தோனிசாமி என்ற தலித் கிருத்துவர் மட்டும் குருமூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் வன்னியராக சித்தரிக்கப்பட்டுள்ளது.
காவல் உதவி ஆய்வாளரை ஒரு ஜாதி வெறியர் போல சித்தரித்து வன்னியர்களின் அடையாளமான அக்கினி கலசத்தை அவர் வீட்டில் காட்சிப்படுத்தி காவல் உதவி ஆய்வாளரை வன்னியர் சமுதாயத்தை சார்ந்தவர் என்றும் ஒட்டு மொத்த வன்னிய சமுதாய மக்கள் ஜாதி வெறி வன்மம் உள்ளவர்கள் போலவும் காட்டியுள்ளனர்.
சூர்யா மன்னிப்பு கேட்கனும் சகோதரத்துவமாக உள்ள இருளர், வன்னியர் சமுதாயத்தில் ஜாதி வன்மத்தை தூண்டும் விதமாக இத்திரைப்படம் எடுத்திருப்பது வன்னியர்களை கொச்சைப்படுத்தும் விதமாகவும், வன்முறையாளர்களாகவும் தொடர்ந்து சித்தரித்து வரும் நடிகர் சூர்யாவின் திரைப்படத்தை அவர் வன்னியர் மக்களிடம் பொது மன்னிப்பு கேட்காத வரை கடலூர் மாவட்டத்தில் ஒளிபரப்ப அனுமதிக்க கூடாது என பாட்டாளி மக்கள் சார்பாகவும், வன்னியர் சங்கம் சார்ப்பாகவும் கேட்டுக் கொள்கின்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும், எதற்கும் துணிந்தவன் படத்தை வெளியிடக்கூடாது என பாமக சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.